போக்குவரத்து விதிகளை பொதுமக்கள் கடைபிடிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நடனம்
போக்குவரத்து விதிகளை பொதுமக்கள் கடைபிடிக்க வலியுறுத்தி சென்னை காவல்துறை சார்பில் கல்லூரி மாணவிகள் மூலம் சாலையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சென்னையில் பொதுமக்கள் சாலைகளில் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கும் பொருட்டு காவல்துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் சாலை விதிகளை கடைபிடிக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியிருந்தார்.
அதன் ஒரு பகுதியாக திருவல்லிக்கேணி போக்குவரத்து காவல்துறை சார்பில் சிக்னல் அருகே கல்லூரி மாணவிகள் மூலம் நடனமாடியும், விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், நடிப்பின் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் தலைக் கவசம் அணிதல், இலகுரக வாகனங்களில் சீட் பெல்ட் அணிதல் உள்ளிட்ட சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், போக்குவரத்து சிக்னல்களை மதித்து வாகனங்களை இயக்க வலியுறுத்தியும் மாணவிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

