வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு விருது... முதலமைச்சர் வழங்கினார்
சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார்.
வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், ஒரு லட்சம் ரூபாய் காசோலை மற்றும் பதக்கத்துடன் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை சேர்ந்த துர்கா தேவிக்கு வழங்கப்பட்டது. கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது, 25,000 ரூபாய் கசோலை மற்றும் பதக்கத்துடன் வேலூரை சேர்ந்த டாக்டர் அ.மு.இக்ரமுக்கு வழங்கப்பட்டது.
நாகை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளர் தங்கதுரை, சென்னை மத்திய புலனாய்வு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜீவானந்தம், அடையாறு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் வேலு, நாகை மத்திய புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் ரமேஷ் குமார், தொப்பூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மாதப்பன் ஆகிய 5 பேருக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் காசோலை மற்றும் சான்றிதழ் உடன் காந்தியடிகள் காவலர் பதக்கம் வழங்கப்பட்டது.
திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தினை கடைபிடித்து அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிகளுக்கான வேளாண்துறை சிறப்பு விருது, நெல்லை மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த சங்கர நாராயணனுக்கு வழங்கப்பட்டது.