காரைக்குடி: ஆவுடையார் கோவில் சிறு காலசந்தி கட்டளை சொத்து மோசடி வழக்கில் நீதிமன்றம் புதிய தீர்ப்பு!
செய்தியாளர்: இ.சகாய பிரதீபா,
பல கோடி மதிப்புள்ள காரைக்குடி ஆவுடையார் கோவில் சிறு காலசந்தி கட்டளை சொத்து மோசடி வழக்கில், நீதிமன்றத்தை ஏமாற்றி உத்தரவு பெற்று மோசடியாக விற்பனை செய்த அனைத்து ஆவணங்களையும் ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
காரைக்குடி அருகே உள்ள நேமத்தான்பட்டி கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் மதுரை அமர்வில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “எங்களது முன்னோர் புதுக்கோட்டை மன்னரிடமிருந்து ஆவுடையார்கோயில் சித்திரம்பூர் உள்ளிட்ட கிராமங்களில் 18 ஆம் நூற்றாண்டில் சுமார் 400 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கி, அதில் வரும் குத்தகை மூலமாக ஆவுடையார் கோவில் ஆத்மநாத சுவாமி திருக்கோவிலில் சிறுகால சந்ததி கட்டளை, அன்னதானம் உள்ளிட்ட இறைப்பணிகளை செய்து வந்தனர்.
பின்னர் அவரது வாரிசுகள் அந்த நிர்வாகத்தை பார்த்து வந்தார்கள். இந்த நிலையில் மேற்படி கோவில் நிலத்தில் பயிர் செய்து வந்த பேராவூரணியைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர் கோவில் நிலத்தில் ஒரு பகுதியை விலைக்கு கேட்டுள்ளார். ஆனால் குடும்பத்தார் தர மறுத்ததால் மறுத்ததால், தாமே பரம்பரை அறங்காவலர் என்று புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தை ஏமாற்றி மனுத்தாக்கல் செய்து உரிய தரப்பினர்களை சேர்க்காமல், 2018 இல் ஒரு உத்தரவை பெற்றார்.
அந்த உத்தரவின் பெயரில் சுமார் 2 கோடி மதிப்புள்ள கட்டளையின் நிலத்தை தனது மகனுக்கும் வேறு சிலருக்கும் விற்று விட்டார். அதன்பின்புதான் இது குறித்து எங்களுக்கு தெரியவந்தது. பின் அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் இருந்து பெற்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்து. இந்த வழக்கை ஏற்கெனவே விசாரணை செய்த நீதிமன்றம் இந்த சொத்துகளில் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என இடைக்கால தடை விதித்திருந்த்து. அந்த தடையை நீக்குவதுடன், அந்த உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி, "மனுதாரர் சுப்பிரமணியம் தாக்கல் செய்துள்ள மனுவின் ஆவணங்களை பார்க்கும்போது 1867இல் புதுக்கோட்டை மன்னரிடமிருந்து சொத்து விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. மேலும் மனுதாரரின் முன்னோர்களே இந்த சொத்தை விலைக்கு வாங்கி நிர்வாகம் செய்து வந்த விவரமும், ஆவுடையார் கோவில் திருக்கோவிலில் இருந்து மனுதாரர் குடும்பமே மேற்படி சிறுகால சந்ததி கட்டளையை நடத்தி வருகிறார்கள் என்ற தகவலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் சிதம்பரம் என்பவர், தான் பரம்பரை அறங்காவலர் என்பதை நிரூபிக்கும் வண்ணம் விசாரணை நீதிமன்றத்தில் எவ்வித ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை. எனவே அவர் கீழமை நீதிமன்றத்தில் பொய்யான காரணத்தைச் சொல்லி சட்டத்தை தவறாக பயன்படுத்தி மேற்படி மனு தாக்கல் செய்துள்ள விவரமும் தெரியவந்துள்ளதால் புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது.
மேலும் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் விற்கப்பட்ட கோவில் மற்றும் அறக்கட்டளையின் சொத்துக்களை பதிவு செய்த ஆவணங்களையும் ரத்து செய்யப்படுகிறது. எனவே அந்த சொத்துக்களை வாங்கிய யாரும் இனி உரிமை கொண்டாட முடியாது” என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.