மாணவர்களுக்கு மரியாதை அளித்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கமிட்டி
ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவ, மாணவிகளைக் கௌரவப்படுத்தும் விதமாக அவர்களது பெயர்களை விழா அழைப்பிதழில் அச்சிட்டு அவனியாபுரம் மக்கள் நெகிழச் செய்துள்ளனர்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் போட்டிகள் நடைபெறவில்லை. ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் முன்னெடுத்த தன்னெழுச்சியான போராட்டம் மக்கள் புரட்சியாக வெடித்தது. இதையடுத்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் மாநில அரசு சார்பில் சட்டம் இயற்றப்பட்டது. இதனால் ஜல்லிக்கட்டுக்கான தடை முழுவதும் நீங்கியதாக தமிழக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம் பாலமேடு உள்ளிட்ட இடங்களில் வரும் பிப்ரவரியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்களைக் கௌரவிக்கும் வகையில் அவனியாபுரம் கிராம மக்கள் அச்சிட்டுள்ள அழைப்பிதழில் உயர்திரு.மாணவ, மாணவிகள் என்று அச்சிட்டு மரியாதை அளித்துள்ளனர். அலங்காநல்லூரில் மாணவர்களுக்கு பிரத்யேக பார்வையாளர்கள் மாடம் அமைக்கப்படும் என்று அந்த கிராம மக்கள் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

