பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் ஆவணி மூலத்திருவிழா

பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் ஆவணி மூலத்திருவிழா
பக்தர்களின்றி எளிமையாக நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் ஆவணி மூலத்திருவிழா

மதுரை மீனாட்சியம்மன் ஆவணி மூலத்திருவிழா, பக்தர்களின்றி இன்று நடைபெற்றிருக்கிறது. புராணங்களில் கூறப்படும் சிவபெருமான் பிட்டுக்கு மண்சுமந்த லீலையும், நிகழ்ச்சியும் அதில் நடைபெற்றுள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சிவனின் திருவிளையாடல் புராணத்தை மையமாகக் கொண்டு நடைபெறும் ஆவணி மூலத் திருவிழா, மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமி - அம்மனின் வீதியுலாவும், கருங்குருவிக்கு உபதேசம் செய்தது, நாரைக்கு முக்தி கொடுத்தல், மாணிக்கம் விற்றது, தருமிக்கு பொற்கிழி அளித்தது, உலவாக்கோட்டை அருளியது, நரியைப் பரியாக்கிய லீலை உள்ளிட்ட சுவாமியின் திருவிளையாடல் புராண நிகழ்வுகளும், சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகமும் கோவிலில் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக விழாவின் சிகர நிகழ்ச்சியான பிட்டுக்கு மண் சுமந்த லீலை இன்று நடைபெற்றது.

இதற்காக சொக்கநாதர், மீனாட்சி அம்மன் இருவரும் பிரியாவிடையுடன் எழுந்தருளி நான்கு ஆடி வீதிகளில் வலம் வந்தனர். பின்னா் சுவாமி அம்மனுடன், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடனும், திருவாதவூர் அருளாளர் மாணிக்கவாசகர் ஆகியோரும் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள பழைய திருமண மண்டபத்தில் எழுந்தருளினர்.

இதையடுத்து சுவாமி வேடமணிந்த சிவாச்சாரியாரும், மன்னர் வேடமணிந்த சிவாச்சாரியாரும் சுவாமியின் பிட்டுக்காக பிரம்படி பட்டு மண் சுமந்த லீலையை நிகழ்த்தி காட்டினர். பின்னர் வந்தியக் கிழவிக்கும், மக்களுக்கும் சுந்தரேசுவரர் அருள்பாலிப்பது போல பூஜைகள் நடந்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் அனுமதியின்றி விழா நடைபெற்றது. மாலை 4 மணிக்கு மேல் பக்தர்கள் பொது சாமி தரிசனத்திற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com