ஆவடி | மரத்தில் சிக்கியிருந்த காற்றாடியை எடுக்க முயன்ற சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்
செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
ஆவடி ராமலிங்கபுரம், ஒன்றாவது தெருவைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார் - எமிலியம்மாள் தம்பதியர். இவர்களுக்கு மூன்று மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த கார்த்திக், தனது தாயுடன் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது சிறுவன் கார்த்திக் இரண்டாவது மாடியில் விளையாடி கொண்டிருந்தார். அங்கு மரத்தில் சிக்கியிருந்த காற்றாடியை கார்த்திக் எடுக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென மாடியில் இருந்து கார்த்திக் கீழே தவறி விழுந்துள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ஆவடி போலீசார், கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.