“குழந்தையின் ஆன்மா மன்னிக்காது”- ஆவடி சிறுமி கொலையில் ஜாமீனில் வந்த நபரால் கொந்தளிக்கும் பெற்றோர்..!
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்டவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயலில் கடந்த ஜூன் மாதம் 27-தேதி 4 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அது சம்பந்தமாக குழந்தையின் பக்கத்துவீட்டுக்காரரும், முன்னாள் ராணுவ வீரருமான மீனாட்சி சுந்தரம் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி ராஜம்மாள் ஆகியோரை திருமுல்லைவாயல் காவல்துறை கைது செய்தது.
இவர்கள் இருவரையும் தூக்கிலிட வலியுறுத்தி சாலை மறியல், காவல்நிலையம் முற்றுகை, உண்ணாவிரதம் எனப் பல்வேறு போராட்டத்தை மக்கள் நடத்தினர். பின்னர் இருவர் மீதும் கொலை மற்றும் கொலைக்கு உடந்தை உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். மேலும் மீனாட்சி சுந்தரத்தின் மீது போக்சோ மற்றும் குண்டர் சட்டமும் பாய்ந்தது.
இந்நிலையில் 5 மாத சிறை தண்டனைக்கு பிறகு வயது மூப்பு, உடல்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு திருவள்ளூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இதனடிப்படையில் கடந்த சனிக்கிழமை மீனாட்சி சுந்தரம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்பகுதி மக்கள் கூறுகையில் “குற்றவாளிகள் இருவரும் வெளியில் உள்ளது நீதித்துறை மீதான தவறான எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர்கள் இந்தப் பகுதியில் சர்வ சாதாரணமாக உலா வரும்போது எங்களுக்கு அது மன உளைச்சலை ஏற்படுத்தும்” என ஆதங்கம் தெரிவித்தனர். உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் கூறுகையில் “என் குழந்தை கொடூரமாக கொல்லப்பட்டுள்ளது. அந்தக் குற்றத்தை செய்த கொடூரன் சுதந்திரமாக திரிந்தால் என் குழந்தையின் ஆன்மாகூட எங்களை மன்னிக்காது. உடனடியாக அரசும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்