\
வெற்றிப் பயணம் திட்டத்திற்கு எதிராக ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்
வெற்றிப் பயணம் திட்டத்திற்கு எதிராக ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்file photo

பெண்கள் இலவச பேருந்தில் சென்றால்.. எங்க வாழ்வாதாரம் என்ன ஆவது? - ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம்

வெற்றிப் பயணத் திட்டத்தால் பெண்கள் அரசுப் பேருந்துகளுக்கு மாறுவதால் தங்களது வருமானம் குறைவதாக கூறி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
Published on: 
Summary

பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது என மதுரை ஆட்டோ ஓட்டுநர்கள் District ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை உள்ளிட்ட மாநகரப் பகுதிகளில் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில், பெண்களுக்கு அனைத்து பேருந்துகளிலும் இலவசப் பயணம் மேற்கொள்ளும் ‘வெற்றி பயணம்’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆட்டோ தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கமான மூவேந்தர் தொழிற்சங்க பேரவை சார்பில் 50க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.

அம்மனுவில், ஒவ்வொரு நகரம் மற்றும் மாநகரப் பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான ஆட்டோ தொழிலாளர்கள் ஆட்டோ ஓட்டி தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து வருகின்றனர். மதுரையில் மட்டும் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் உள்ளனர். இந்நிலையில், தமிழக அரசு அனைத்து பேருந்துகளிலும் இலவசப் பயணம் என அறிவித்துள்ள ‘வெற்றி பயணம்’ திட்டத்தால் லட்சக்கணக்கான ஆட்டோ தொழிலாளர் குடும்பங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிகளில் கடன் வாங்கி ஆட்டோ ஓட்டி வருபவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமலும், வாடகை ஆட்டோக்களை இயக்குபவர்கள் வாடகை செலுத்த முடியாமலும் சிரமப்படுகின்றனர். மேலும், ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது குழந்தைகளின் பள்ளிக் கட்டணத்தைக்கூடச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே, லட்சக்கணக்கான ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக ஆட்டோ தொழிலாளர்களின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழக அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது

ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு தனித் திட்டத்தை அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் புதிதாக மின்சார ஆட்டோ வாங்குவதற்கு 50 சதவீத மானியம், அதிகபட்சமாக ரூ.75,000 வரை வழங்க வேண்டும். மேலும், ஆட்டோக்களை சி.என்.ஜி. முறைக்கு மாற்றுவதற்கும் 50 சதவீத மானியம் வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

ஆட்டோ
ஆட்டோfile photo

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மட்டுமே ஆட்டோ இயக்குவதற்கான அனுமதி (Permit) வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது

பெண்களுக்கான இலவச ‘வெற்றி பயணம்’ திட்டத்தை மறுபரிசீலனை செய்து, ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறும் பட்சத்தில், தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com