வாணியம்பாடி: காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு டெங்கு – சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு
செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் (39). ஆட்டோ ஓட்டுநரான இவர், கடந்த ஒரு வாரகாலமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், ஜெயபாலுக்கு காய்ச்சல் தீவிரமானதை அடுத்து அவருக்கு ரத்த பரிசோதனை செய்தனர். அப்போது, ஜெயபாலுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து ஜெயபாலை அவரது உறவினர்கள் மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதனைத்தொடர்ந்து சுகாதாரத் துறை மற்றும் வாணியம்பாடி நகராட்சி ஊழியர்கள் ஜெயபாலின் வீடு மற்றும் ஆசிரியர் நகர் பகுதியில் கொசு மருந்து அடித்து, ஜெயபாலின் வீட்டில் உள்ள நீரை ஆய்வு செய்து, நகராட்சி ஊழியர்கள் தூய்மை செய்தனர். அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு நகராட்சி ஊழியர்கள் நிலவேம்பு குடிநீரை வழங்கினர்.