சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறிய ஆட்டோ - சிசிடிவி காட்சி
சென்னையில் சாலையோரம் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது ஆட்டோ ஏறியதில், ஒரு பெண் உயிரிழந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
தண்டையார்பேட்டையைச் சேர்ந்த காளியப்பன், தனது ஆட்டோவில் சென்ட்ரலில் இருந்து மூலக்கொத்தளம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது ப்ளூஸ்டார் ஹோட்டல் அருகே, இரண்டு நாய்கள் திடீரென சாலையின் குறுக்கே சென்றதாக தெரிகிறது. இதனால் நிலைதடுமாறிய ஆட்டோ ஓட்டுநர் காளியப்பன், பிரேக் பிடித்துள்ளார். கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியது.
இதில் அஞ்சலை என்ற பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 3 பேர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் காளியப்பனை கைது செய்து யானைக்கவுனி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.