ஜனவரியில் திருநெல்வேலி திரும்பும் கடத்தப்பட்ட சிலைகள் - ஊர் மக்கள் மகிழ்ச்சி!
15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சிலை, 6 மற்றும் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த 2 சிலைகள் என மொத்தம் 3 சிலைகளை ஆஸ்திரேலியா அருங்காட்சியகம் இந்தியாவில் இருந்து வாங்கிச்சென்றது. அதில் திருநெல்வேலி மாவட்டம் அத்தாளநல்லூர் மூன்றீஸ்வரர் கோயிலில் காணாமல் போன 2 சிலைகள் அடங்கும்.
கடந்த 1995-ம் ஆண்டு இக்கோயிலில் இருந்து இரு துவாரபாலகர்கள் சிலைகள் திருடு போயின. இது குறித்து வீரவநல்லூர் காவல்நிலையத்தில் அப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பின்னர் துப்பு கிடைக்காமல் விசாரணையில் தொய்வு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சிலைகடத்தல் தடுப்புபிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் இந்த வழக்கை கையில் எடுத்தார்.
அவரது தீவிர விசாரணையில் சர்வதேச சிலைகடத்தல்காரர் சுபாஷ் சந்திரகபூர் மூலம் சிலை ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்துக்கு விற்கப்பட்டது தெரியவந்தது. அதன் பின்னர், அதிகாரி பொன்மாணிக்கவேல், கேன்பெரா அருங்காட்சியகத்திற்கு சிலைகளை திரும்ப தர கோரி கடிதம் எழுதினார்.
இந்நிலையில் ஜனவரி மாதம் இருசிலைகளும் தமிழகம் வரவுள்ளதாக பொன்மாணிக்கவேல் புதியதலைமுறைக்கு தெரிவித்தார். விசாரணையில் அவை இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட சிலைகள் என தெரியவந்தது. இதனை அடுத்து அந்த சிலைகளை இந்தியாவிடமே திருப்பி தருவதற்கு ஆஸ்திரேலியா அரசு முடிவு செய்துள்ளது. அந்த சிலைகளை ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் இந்தியாவிடம் ஒப்படைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடத்தப்பட்ட சிலைகள் சொந்த ஊர் திரும்புவதை அறிந்த அத்தாளநல்லூர் சுற்றுவட்டார மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.