‘ஓபிஎஸ் மேல் எனக்கு மிகவும் மரியாதை’: சர்ச்சை குறித்து குருமூர்த்தி விளக்கம்

‘ஓபிஎஸ் மேல் எனக்கு மிகவும் மரியாதை’: சர்ச்சை குறித்து குருமூர்த்தி விளக்கம்
‘ஓபிஎஸ் மேல் எனக்கு மிகவும் மரியாதை’: சர்ச்சை குறித்து குருமூர்த்தி விளக்கம்

‘முன்னும் பின்னும் நான் என்ன கூறினேன் என்று கூறாமல் நடுவில் நான் கூறியதை திரித்து பரப்புவது கண்ணியமல்ல’ என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

திருச்சியில் துக்ளக் பத்திரிகையின் பொன்விழா சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அந்த பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி, இரண்டாக பிரிந்த அதிமுகவை இணைத்ததில் தனக்கு பங்கு உள்ளதாகக் கூறினார். தனது அறிவுறுத்தலின் படியே ஜெயலலிதாவின் நினைவிடத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தியானத்தில் அமர்ந்ததாகவும், அதன் பின்னரே கட்சியில் இணைப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், ஓ.பி.எஸ். குறித்து சர்ச்சைக்குரிய வகையிலும் குருமூர்த்தி சில கருத்துகளை பேசினார்.

ஓ.பன்னீர்செல்வம் குறித்து குருமூர்த்தி பேசியது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், குருமூர்த்தி நாவடக்கத்துடன் பேச வேண்டும் எனத் தெரிவித்தார். 

இந்நிலையில், தான் என்ன கூறினேன் என்று விளக்கம் அளித்துள்ளார் குருமூர்த்தி. இதுபற்றி ட்விட்டரில் அவர், “ஓபிஎஸ்சிடம் பேசிய போது அவரைத் தனிப்பட்ட முறையில் குறிப்பிடவில்லை. ஏன் அதிமுகவினர் துணிவில்லாமல் சசிகலா காலில் விழுகிறார்கள் என்கிற அர்த்தத்தில்தான் கேட்டேன். அது அவருக்கும் தெரியும். அவர் தான் அதிமுகவை சசிகலாவிடமிருந்து காப்பாற்றினார். அவர் மேல் எனக்கு மிகவும் மரியாதை. இதை ஏற்கெனவே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறேன். 

திருச்சி துக்ளக் கூட்டத்தில் அதைக் கூற காரணம், எனக்கு முன் பேசியவர், ஜெயலலிதாவை ஆதரித்த துக்ளக் அவரே ஏற்ற சசிகலாவை எதிர்த்தது சரியல்ல என்று கூறினார். பதில் கூறும்போது ஓபிஎஸ் சந்திப்பு, அவர் எப்படி அதிமுகவை மீட்டார் என்று கூறினேன்.

எனவே முன்னும் பின்னும் நான் என்ன கூறினேன் என்று கூறாமல் நடுவில் கூறியதை திரித்து பரப்புவது கண்ணியமல்ல. மறுபடியும் கூறுகிறேன். எனக்கு அதிமுகவில் அதிகம் பேரைத் தெரியாது. தெரிந்தவர்களில் எனக்கு ஓபிஎஸ் மேல் தான் அதிகம் மரியாதை. கருத்து வேறுபாடுகள் தவிர்த்து’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com