சாமி சிலையை அகற்ற முயற்சி - தற்கொலை மிரட்டல் விடுத்த மக்கள்
கடலூர் மாவட்டம் அரியநாச்சியில் சாமி சிலையை அகற்றியதை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து மீண்டும் சிலை அதே இடத்தில் வைக்கப்பட்டது.
அரியநாச்சி கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மாரியம்மன் கோயிலை மீண்டும் கட்டுவதற்கான பணிகள் 6 ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதற்கு கிராமத்தை சேர்ந்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
பின்னர், அதே இடத்தில் சாமி சிலை வைத்து மக்கள் வழிபட்டு வந்தனர். இந்நிலையில் 6 ஆண்டுகளாக கோயில் விவகாரத்தில் பிரச்சனைகள் உள்ளதால் சாமி சிலையை அகற்றி சீல் வைக்க வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் இன்று சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் கதறி அழுதபடி சிலையை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர்.
பதற்றமான சூழல் நிலவியதால் அப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். மக்கள் எதிர்ப்பை மீறி சிலையை அகற்றிய அதிகாரிகள், கோயில் அருகே இருந்த மண்டபத்தில் வைத்து சீல் வைத்தனர். இதனால் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகளுடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மண்ணெண்ணை கேன்களுடன் தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களின் போராட்டத்தையடுத்து அம்மன் சிலையை எடுத்த இடத்திலேயே மீண்டும் வைத்த காவல்துறையினர், கோயில் உள்ள பகுதியில் 145 மற்றும் 146 தடை உத்தரவுகளை பிறப்பித்தனர்.