அரசு மருத்துவர் மீது தாக்குதல் - பாதுகாப்பு கேட்டு ஆர்ப்பாட்டம்
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
திருவாரூர் அருகே இலவங்கார்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காமராஜ். இவருக்கு நேற்று இரவு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக உறவினர்கள் காமராஜை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி காமராஜ் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் காமராஜின் மகன் தாமரைச்செல்வன் தந்தை இறந்ததற்கு காரணம் பணியில் இருந்த மருத்துவர்கள் தான் எனக் கூறி, அங்கு பணியில் இருந்த மருத்துவர் பிரபா மற்றும் பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும் மருத்துவமனை கண்ணாடிகளையும் உடைத்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தாமரைச்செல்வன் மீது நான்கு பிரிவின் கீழ் திருவாரூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்தச் சம்பவத்தை கண்டித்து மருத்துவமனை வளாகம் முன்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்களுக்குப் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கங்களை அப்போது அவர்கள் எழுப்பினர். மேலும் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பயிற்சி மருத்துவர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.