ஸ்டாலின் பங்கேற்ற கிராம சபை கூட்டத்தில் அதிமுக பெண் நிர்வாகியால் சலசலப்பு - நடந்தது என்ன?

ஸ்டாலின் பங்கேற்ற கிராம சபை கூட்டத்தில் அதிமுக பெண் நிர்வாகியால் சலசலப்பு - நடந்தது என்ன?

ஸ்டாலின் பங்கேற்ற கிராம சபை கூட்டத்தில் அதிமுக பெண் நிர்வாகியால் சலசலப்பு - நடந்தது என்ன?
Published on

கோவை தொண்டாமுத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றக் கூட்டத்தில், அதிமுகவைச் சேர்ந்த பெண் ஒருவரால் சலசலப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ள தேவராயபுரம் பகுதியில், திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின், மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், எல்.இ.டி. பல்ப் மாற்றும் திட்டத்தில், 450 ரூபாய் பல்பை 3,737 ரூபாய்க்கு வாங்கி, அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஊழல் செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு வைத்தார்.

மேலும், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவில்லை என்றால், அரசியலை விட்டு விலகத் தயார் எனவும் குற்றச்சாட்டுகளை தான் நிரூபித்தால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அரசியலை விட்டு விலகத் தயாரா எனவும் கேள்வி எழுப்பினர்.

அப்போது கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசி கொண்டிருந்த போது, அதிமுக மகளிர் பாசறை கோவை மாவட்ட துணைத் தலைவர் பூங்கொடி என்பவர் தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதனால், கூட்டத்தில் இருந்தவர்கள் பெண்ணை அங்கிருந்து வெளியேற்றினர். அதன்பின் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், திமுக நடத்தும் கூட்டத்தில் பெண் ஒருவர் மூலம் கலவரத்தை உண்டாக்க அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார். திட்டமிட்டு மக்கள் கிராமசபைக் கூட்டத்தை சீர்குலைக்க சதி நடப்பதாகவும் ஸ்டாலின் சாடினார்.

இதற்கிடையில், சம்பந்தப்பட்ட பெண் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் நடந்த சம்பவத்தை அலைபேசியில் விவரிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அப்போது அந்த பெண் அலைபேசியில் “உங்களைப் பற்றி குறைகூறிப் பேசியதால் எழுந்து பேசினேன். கேள்வி கேட்ட என்னையும் மற்றொருவரையும் தாக்கினர். காவல் துறையினர் தான் எங்களைக் காப்பாற்றினர்” எனத் தெரிவித்தார்.

திமுக கூட்டத்தில், அதிமுக பெண் நிர்வாகியை தாக்கிவிட்டதாக அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாக கைது செய்யவலியுறுத்தி தொண்டாமுத்தூர் காவல் நிலையம் அருகே போராட்டம் நடைபெற்றது. தாக்குதலுக்கு ஆளானதாகக் கூறப்படும் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் வேலுமணி கூறுகையில், “என்னிடம் அலைபேசியில் அந்தப் பெண் பேசினார். தாக்கப்பட்டதாகக் கூறியதால் மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினேன். பொறுமையாக பதிலளிக்காமல் தாக்கியது தவறு” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com