41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்ற காவலரை பாராட்டிய தமிழக டிஜிபி
ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்ற காவலரை பாராட்டி அதை ஊக்கப்படுத்தும் வகையில் காவல் துறை தலைமை இயக்குநர், காவலர் நாகநாதன் பாண்டியின் பெற்றோரை நேரில் அழைத்து வாழ்த்தி சிறப்பு உதவிகளை வழங்கினார்.
தமிழக காவல் துறையில் காவலராக பணி புரிபவர் நாகநாதன் பாண்டி. இவர் ராமநாதபுர மாவட்டம், கமுதி தாலுக்காவில் உள்ள சிங்கபுலியப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர். இவர் தற்போது சென்னை காவல்துறை ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் அனைத்து இந்திய காவல் துறை விளையாட்டு போட்டியில் 4*400 பிரிவில் தடகள பந்தயத்தில் முதலிடம், மாநில அளவில் 46.61 நொடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்க பதக்கம் வென்றார்.
மேலும் Granfix போட்டிகளில் 47.00 நொடிகளில் தங்க பதக்கமும் மற்றும் இவர் Federation கோப்பையில் 46.09 நொடிகளில் வெள்ளி பதக்கமும், தமிழ்நாடு முதலமைச்சர் தடகள போட்டியில் 47.00 நொடிகளில் கடந்து தங்க பதக்கம் வென்றுள்ளார்.
இந்தியா சார்பில் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் நாகநாதன் பாண்டியின் தந்தை பாண்டி மற்றும் தாய் பஞ்சவர்ணம் இருவரையும் தமிழ்நாடு காவல் துறைத் தலைமை இயக்குநரும், சட்டம் ஒழுங்கு டிஜிபியுமா சைலேந்திர பாபு தனது அலுவலகத்திற்கு அழைத்து வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து காவல் துறையின் சார்பில் சிறப்பு உதவிகளையும் வழங்கினார்.
சுமார் 41 வருடங்கள் கழித்து தமிழ்நாடு காவல் துறையில் இருந்து தடகள வீரர் ஒருவர் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 1980 ஆம் ஆண்டு உதவி ஆய்வாளர் சுப்ரமணியன் என்பவர் மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது