அத்திப்பட்டு | தண்டவாளத்தில் அறுந்துகிடந்த உயரழுத்த மின்கம்பி.. ஆங்காங்கே நிறுத்தப்பட்ட ரயில்கள்!
செய்தியாளர்: ஐடா அருட்செல்வி & M.எழில்
எண்ணூர் - அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் உயரழுத்த மின் கம்பி அறுந்து கிடந்ததால், ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் சென்ற புறநகர் மற்றும் விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.
சென்னை கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி புறநகர் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே சென்றபோது, தண்டவாளத்தில் உயரழுத்த மின் கம்பி அறுந்து கிடந்தது. அந்த மின் கம்பி ரயிலின் அடியில் சிக்கியதை அறிந்த ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், தண்டவாளத்தில் கிடந்த மின் கம்பியை அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே, சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கிச் சென்ற புறநகர் ரயில்கள் மற்றும் விரைவு ரயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் ரயில் பயணிகள் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மின் கம்பிகள் அகற்றப்பட்டு சீரமைப்புப் பணிகள் முடிந்த பின்னர், ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
அனல்மின் நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொண்டு செல்லும் ராட்சத மின் கோபுரங்களில் உள்ள கம்பிகள் அடிக்கடி அறுந்து விழுவதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் ரயில் பயணிகள் தெரிவித்தனர்.

