அத்திவரதர் வைபவ வழக்குகளில் வரும் 29-ஆம் தேதி தீர்ப்பு
அத்திவரதர் வைபவத்திற்கு வரும் பக்தர்களுக்கான பாதுகாப்பு, மூலவர் வரதராஜ பெருமாள் தரிசனம் குறித்த வழக்குகளின் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
அத்திவரதர் வைபவத்திற்காக காஞ்சிபுரம் வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு, மத்திய துணை ராணுவ பாதுகாப்பு, வரதராஜர் சன்னதி திறப்பு, உயிரிழந்தவர்களுக்கு 15 லட்ச ரூபாய் இழப்பீடு, அப்பகுதியை சேர்ந்த மக்களுக்கு அன்றாட வாழ்க்கை பாதிக்காத வகையில் நடவடிக்கை ஆகிய கோரிக்கைகளுடன் 5 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் இன்று நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிடுகையில்,
“வழக்கமாக அப்பகுதிவாசிகள் பயன்படுத்தக்கூடிய சாலைகள், தெருக்களை அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்த முடியவில்லை. கோயிலை சுற்றியுள்ள 250 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதால் சி.ஐ.எஸ்.எஃப். பாதுகாப்பு வழங்க வேண்டும். அத்திவரதர் அமைந்துள்ள வசந்த மண்டபமும், வரதராஜ பெருமாள் சன்னதியும் ஒரு கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் உள்ளது. அதனால் இரண்டையும் தரிசிப்பதில் சிக்கல் இருக்காது. பக்தர்கள் நலனை காரணம் காட்டி வரதராஜ பெருமாள் சன்னதியை மூடக்கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது விழா ஏற்பாடுகள் குறித்து அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த்பாண்டியன் ஆஜராகி விளக்கமளித்தார். “சிறப்பு முகாம்கள், ஆம்புலன்ஸ், பைக் ஆம்புலன்ஸ், மொபைல் மருத்துவமனை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதுவரை 22 வயது இளைஞர் உள்ளிட்ட 6 பேர் மரணமடைந்துள்ளனர். 6 பேருக்கும் ஏற்கெனவே உடல் நலக்குறைவு இருந்துள்ளது. அத்திவரதரை தரிசித்து விட்டு வந்த பின்னர்தான் 6 பேரின் மரணமும் நிகழ்ந்துள்ளது. அவர்கள் கூட்ட நெரிசலால் உயிரிழக்கவில்லை. தற்போது அத்திவரதரே மூலவர். ஒரே நேரத்தில் இரண்டு மூலவர் இருக்க கூடாது என்பதால் வரதராஜ பெருமாள் சன்னதி மூடப்பட்டுள்ளது. உள்ளூர்வாசிகள் சிரமப்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதிகள் அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். அத்திவரதரை தரிசித்த பின்னர் வரதராஜ பெருமாளை தரிசிக்க வாய்ப்புள்ளதா? எனக் கேட்டனர். அதற்கு அரசு தரப்பில், இலவச தரிசனம் வருபவர்கள் அனைவரும் கிழக்கு கோபுரம் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். மேற்கு கோபுரம் வழியாக விஐபி, ஆன்லைன், நன்கொடையாளர்கள் பாஸ் வைத்திருப்பவர்களும், அரசியலைமைப்பு சார்ந்தவர்கள் (constitutional authority) அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே இவர்களால் பொது தரிசன பக்தர்கள் பாதிக்கப்படமாட்டார்கள்.
ஜூலை 18வரை மூலவர் வரதராஜ பெருமாளையும் தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டதாகவும், கூட்ட நெரிசல் காரணமாகவே தரிசனம் நிறுத்தப்பட்டுள்ளது. நாளை ஆடிப்புரம் விழா தொடங்க உள்ளதால் மூலவர் சன்னதி உட்பட அனைத்து சன்னதிகளிலும் தரிசிக்க பக்தர்களை அனுமதிப்பது குறித்து அரசின் உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து வரும் திங்கட்கிழமைக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.