முதல்வர் பங்கேற்ற கூட்டத்தில் திருட முயன்ற நபர்... காவலர் பிடியில் இருந்து தப்பி ஓட்டம்
ஓமலூரில் முதல்வர் பங்கேற்ற கூட்டத்தில் திருடியதாக கூறி கைது செய்யப்பட்ட நபர் காவலர்கள் பிடியில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது ஓமலூரை சேர்ந்த சேகர் என்பவரின் பாக்கெட்டில் இருந்த பணத்தை ஒரு வாலிபர் திருட முயன்றதாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து அந்த வாலிபரை சேகரும், பக்கத்தில் இருந்தவர்களும் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த பிரபுராஜ் மகன் இஸ்ராயில் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து சேகர் அளித்த புகாரின் பேரில், இஸ்ராயில் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.அதனைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்த காவல்துறையினர் முடிவிற்காக காத்திருந்தனர்.
இந்நிலையில் அதிகாலை சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறிய இஸ்ராயில் திடீரென காவல்துறை பிடியில் இருந்து தப்பி ஓடினார். அவரை காவலர்கள் பிடிக்க முயன்றும் இஸ்ராயில் தப்பி ஓடி விட்டார். தப்பியோடிய இஸ்ராயிலை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருடனை தப்பவிட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.