'கொரோனா நெகட்டிவ் எந்நேரத்திலும் பாசிட்டிவ் ஆகலாம்'-பீலா ராஜேஷ் தகவல் !
கொரோனா வைரஸ் தாக்கவில்லை என சோதனை முடிவுகள் வந்தாலும் அதை முழுவதும் நம்ப முடியாது என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் கொரோனா அறிகுறி உள்ளவர்களை சோதிக்கும்போது முதலில் நெகட்டிவ் என வந்தாலும் பின்னர் அது பாசிட்டிவ் என எந்த நேரத்தில் வேண்டுமானாலும் மாறலாம் எனக் கூறியுள்ளார். எனவே நெகட்டிவ் என வந்தவர்களையும் 28 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிப்பது அவசியமாகிறது என்றும் அவர் தன் பதிவில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411ஆக அதிகரித்துளளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நேற்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்னும் 484 பேரின் சோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 7 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் 3 ஆயிரத்து 684 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 411 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இந்த 411 பேரில் 364 பேர் டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

