இப்படியெல்லாமா நடக்கும்!! பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட இளைஞரின் பதைபதைக்க வைக்கும் பேட்டி!

பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அங்கு நடந்த சம்பவம் குறித்து அவர்கள் விளக்கியுள்ளனர்.
Balveer Singh
Balveer SinghBalveer Singh file image

விசாரணைக் கைதிகளை அழைத்துச் சென்று பல் பிடுங்கிய விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளானது. இதைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங், நெல்லை எஸ்.பி சரவணன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆய்வாளர்கள் 3 பேர் உட்பட மொத்தம் ஆறு பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பல் பிடுங்கிய விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட அருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர், வழக்கறிஞர் ஹென்றி திபேன் ஆகியோர் இணைந்து மதுரையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அருண்குமார், ”சீருடை அணியாத இரண்டு போலீசார், என்னை பின்பக்கத்திலிருந்து இரு கைகளால் இறுகப் பிடித்துக் கொண்டு எனது கால்களை அசையவிடாமல், அவர்கள் கால்களால் மிதித்துக்கொண்டார்கள்.

அப்போது பல்வீர்சிங் ASP, என் முன்னால் வந்து என்னை வாயைத் திறக்க சொன்னார். ’நான் திறக்கமாட்டேன்’ என்று சொல்லி, வாயை இறுகலாக மூடிக் கொண்டேன். இதனைப் பார்த்த பல்வீர்சிங் ASP அவர் கையில் வைத்திருந்த கல்லால் எனது இடது பக்க கீழ் உதட்டில் ஓங்கி அடித்தார். நான் வலி தாங்க முடியாமல் ’அம்மா’ எனக் கத்தினேன். அப்போது, ’வாயைத் திற’ என்று சொன்னார். நான் பயந்துகொண்டே வாயைத் திறந்தேன். உடனே பல்வீர்சிங், தன் கையில் வைத்திருந்த சுமார் 250 கிராம் எடை கொண்ட கருங்கல்லை வைத்து மேல்தாடையிலுள்ள பற்களில் அழுத்தி தேய்த்தார்.

மேலும், பற்களின் மேலே உள்ள சதைப்பகுதியையும் சேர்த்து தேய்த்தார். என்னால் வலி தாங்க முடியாமல் வாய்விட்டுக் கத்தக்கூட முடியாமல் அழுதேன். தொடர்ந்து கீழ்த்தாடையில் உள்ள பற்களையும் சதையினையும் தேய்த்தார். அப்போது எனக்கு உயிர் போகிற அளவிற்கு வலி ஏற்பட்டது. அதன் பின்பு எனது மேல்தாடையிலுள்ள பல்லை ஓங்கி ஓங்கி சுமார் 5 முறை அடித்தார். அப்போது நடுப்பல்லை ஒட்டியுள்ள இடதுபக்க முதல்பல் பாதி உடைந்தது. நான் வலி தாங்க முடியாமல், ’விடுங்க சார் விடுங்க சார்’ என்று கத்தினேன். நான் வலி தாங்க முடியாமல் வாயை மூடியபோதெல்லாம் உதட்டில் கல்லால் அடித்தார். இதனால், நான் வாயைத் திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மேல்பக்க பல் உடைந்த பின்பு கீழ்த்தாடையிலுள்ள பல்லில் கல்லை வைத்து தட்டி தட்டி உடைத்தார். இதனால் கீழ்பக்கம் உள்ள நடு 3 பற்கள் பாதி உடைந்து கீழே விழுந்தது.

மீண்டும் ஏஎஸ்பி, எனது வலது பக்க கீழ் பற்களில் கல்லை வைத்து தட்டினார். அதன்பின்பு இரண்டு பற்களும் நடுவே கல்லை வைத்து கடிக்கச் சொன்னார். நான் கல்லை கடிக்க மறுத்தபோது பின்னாலிருந்து லத்தியால் என் பிட்டம் மற்றும் பின்பக்க கால்களில் ஓங்கி ஓங்கி அடித்தார்கள். லத்தியால் அடித்ததால் வலி தாங்க முடியாததால் எனது வலது பக்க பல்லின் நடுவே கல்லை வைத்தபோது நான் அதைக் கடித்தேன். 5 முறை திரும்ப திரும்ப கடிக்கச் சொன்னார்கள். நான் கடிக்க மறுத்தபோதெல்லாம் அடித்தார்கள்.

அதன்பின்பு பல்வீர்சிங், பல்லை பலமுறை தனது கைகளால் ஆட்டி வெடுக்கென பிடுங்கி எடுத்துவிட்டார். அப்போது, ’அம்மா’ என கத்தி அலறினேன். அதன்பின்பு என்னை தனியாக உட்காரச் சொன்னார். ஏற்கனவே லத்தியால் அடித்ததால் இடுப்பு, பிட்டம் மற்றும் கால்களில் பயங்கர வலியாக இருந்தது. பல்லை தேய்த்து, அடித்து உடைத்ததால் கழுத்து, தலை, முகம் என அனைத்து பகுதிகளிலும் மிகவும் வலியாக இருந்தது. நாங்கள் ரத்தக் கறையுடன் இருந்த நிலையைப் பார்த்த என் அம்மா கதறி அழுதார். அவர் கொண்டுவந்து கொடுத்த உடையை போலீசார் மாற்றிக் கொள்ளக் கூறினார்.

திரும்பவும் லாக்கப்பில் என் அறைக்கு வந்த பல்வீர்சிங், ஹிந்தியில் என்னைத் திட்டிக்கொண்டே கன்னத்தில் அறைந்தார். மேலும், ’இங்கு நாங்கள் அடித்ததை யாரிடவும் சொல்லக்கூடாது. அப்படி சொன்னால் உங்கள் மீது பொய் வழக்கு போட்டு உங்களை உள்ளே தள்ளி விடுவேன். உங்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாகிடும். அதனால் யாரும் கேட்டால், வண்டியிலிருந்து கீழே விழுந்ததாக சொல்ல வேண்டும்’ என மிரட்டினார்.

மேலும் போலீசார் எங்களுக்குச் சாப்பாடுகூட வாங்கித் தரவில்லை. எங்கள் அம்மா வாங்கிக் கொடுத்த சாப்பாட்டையும் போலீசார் தாக்கியதில் ஏற்பட்ட காயத்தால் எங்களால் சாப்பிட முடியவில்லை. மருத்துவர், என்ன நடந்தது’ என்று கேட்டபோதுகூட, நான் போலீஸுக்குப் பயந்து உண்மையைச் சொல்லவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

”பூட்ஸ் காலால் என் இடதுபக்க நெஞ்சில் ஓங்கி மிதித்தார்”

இந்த விவகாரம் குறித்துப் பேசிய 17 வயது சிறுவன், “ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் எதோ திட்டிக்கொண்டே சுமார் 5 அடி உயரமுள்ள லத்திக் கம்பை எடுத்து என் பின்பக்க தொடையில் ஓங்கி ஓங்கி பலமுறை அடித்தார். நான் வலிதாங்க முடியாமல் கதறினேன். சுமார் 10 நிமிடங்கள் விடாமல் தொடர்ச்சியாக அடித்தார். அதன்பின்னர் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முருகேசன், என் இரண்டு கைகளையும் நீட்டச் சொல்லி லத்தியால் ஓங்கி ஓங்கி பலமுறை அடித்தார். என்னைப் பின்னால் திரும்பி நிற்கச் சொல்லி என் பின்பக்க பிட்டத்தில் அடித்தார்.

அதன் பின்னர் ஏ.எஸ்.பி. பல்வீர்சிங் மேஜையில் இருந்த ஒரு கல்லை எடுத்து எனது வாயின் முன்புற உதடுகளை அகலமாக விரிக்கச் சொல்லி கற்களால் என் பற்களில் கடுமையாகத் தேய்த்தார். என் உதட்டில் கல் பட்டு சிராய்ப்பு காயம் ஏற்பட்டு இரத்தம் கொட்டியது. எனது பற்கள் கூச ஆரம்பித்தது. பின்னர் ஏ.எஸ்.பி. பல்வீர்சிங் பூட்ஸ் காலால் என் இடதுபக்க நெஞ்சில் ஓங்கி மிதித்தார். நான் நிலைதடுமாறி கீழே விழுந்து வலியால் அலறினேன். எனக்கு நடந்த சித்திரவதைகளை, என் அண்ணன் அருண்குமார் உட்பட 6 பேரும் பயந்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த சம்பவம் சுமார் 2 மணி நேரம் நடந்தது” எனத் தெரிவித்தார்.

”எங்களுக்கு ஒரேயொரு சாட்சிதான் வேண்டும்”

வழக்கறிஞரும், சமூக செயற்பாட்டாளருமான ஹென்றி திபேன், “முறையாக சட்டங்களை நடைமுறைப் படுத்திக்கொண்டிருக்கிறோம் என்று சொல்லும் தமிழக அரசு, இதன் பின்னணியின் இருக்கும் விஷங்களைப் பார்க்க வேண்டும். சீருடை இல்லாமல் மிரட்டப்பட்ட இந்த சம்பவம் சிறாருக்கு எதிரானது. எங்களுக்கு ஒரேயொரு சாட்சிதான் வேண்டும். அம்பாசமுத்திரம் காவல் நிலைய சிசிடிவி காட்சிகள் மட்டும் வேண்டும்” என்றார்.

”உள்ளாடையுடன் நிறுத்திவச்சிருந்தாங்க” - தாயார் கண்ணீர்!

பாதிக்கப்பட்ட அருண்குமாரின் தாயார், “எங்கள் பையனை உள்ளாடையுடன் நிறுத்திவைத்திருந்தனர். அப்போது அங்கிருந்த போலீசார், ‘நீங்கள் வெளியில் செல்லுங்கள்’ என்றனர். அப்போதுகூட என் முன்னாலேயே போலீசார் என் மகனை மிரட்டினர்” என்றார்.

போதையில் நடந்த சின்ன அடிதடி தகராறுதான்..

நண்பர்கள் இருதரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலே, இந்தப் பிரச்சினைக்குக் காரணமாகியுள்ளது. சம்பந்தப்பட்ட இளைஞர் அருண்குமார், பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த அவர், நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். அப்போது அருண்குமாரின் நண்பர் ஒருவருடைய முன் விரோதத்தால் ஏற்பட்ட பிரச்சினையில் அடிதடியாகி உள்ளது. இந்த பிரச்சினையே தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

- பிரசன்ன வெங்கடேஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com