காரில் வாழ்ந்து காரில் முடிந்த அஸ்வின் சுந்தரின் வாழ்க்கை
கார் ஓட்டுவதையே வாழ்க்கையாக, சுவாசமாக கொண்டிருந்த பிரபல கார்பந்தய வீரர் அஸ்வின் சுந்தரின் வாழ்க்கை, அந்த காரிலேயே முடிந்திருப்பது பலருக்கு அதிர்ச்சியை அளித்திருக்கிறது.
பிரபல நடிகர் அஜீத்தால் பாராட்டப்பட்ட இந்த இளம் தேசிய சாம்பியன், தனது மனைவியுடன் காரில் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கிறார். அஸ்வின் சுந்தருக்கு கார்கள் மீது அலாதிப் பிரியம். கார்களின் காதலரான அஸ்வின் சிறுவயதில் இருந்தே கார் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவர். பலவிதமான கார்களை ஓட்டக்கூடிய திறமை பெற்ற இந்த இளம் வீரர், 2003 ஆம் ஆண்டு எம்ஆர்எப் பார்முலா போட்டியில் வெற்றிபெற்று தேசிய சாம்பியனானபோது அனைவராலும் திரும்பிப் பார்க்கப்பட்டவர்.
அடுத்து 2004 ஆம் ஆண்டிலும் தேசிய சாம்பியனானார். அடுத்தடுத்து ஆசிய அளவிலும், தேசிய அளவிலும் வெற்றிகளைக் குவித்தார் அஸ்வின். 2012, 2013 ஆம் ஆண்டுகளில் பார்முலா 4 கார் பந்தயங்களில் தேசிய சாம்பியனான இவர், சர்வதேச போட்டிகளிலும் முத்திரை பதித்தவர். தமிழக அரசின் சார்பிலும் விருது அளித்து கவுரவிக்கப்பட்டவர் அஸ்வின் சுந்தர். கார்பந்தய பிரியரான நடிகர் அஜீத் இவருக்கு கார்பந்தய உடையை பரிசளிக்கும் அளவுக்கு அஸ்வினுடன் நட்பு கொண்டிருந்தார்.
மனைவி நிவேதிதா, சில மாதங்களுக்கு முன்புதான் மருத்துவப்படிப்பை முடித்திருந்தார். காதலித்த பெண்ணையே கரம் பிடித்த மகிழ்ச்சியை எதிரொலிக்கும் விதத்தில் அஸ்வின் சுந்தர் - நிவேதிதாவின் திருமண விழா, வெகு விமரிசையாக நடந்திருந்தது.
கார்கள் இல்லாமல் இவரது வாழ்க்கையே இல்லை என்னும் அளவுக்கு கார் பிரியராக வாழ்ந்த அஸ்வின் சுந்தர், தனது மனைவி நிவேதிதாவுடன் நேற்றிரவு ஒன்றரை மணி அளவில் பட்டினப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதிக்குச் சென்றார். அம்பேத்கர் மணிமண்டபம் அருகில் இவரது கார் வந்தபோது, வேகத்தடையில் மோதி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதியிருக்கிறது. மோதிய வேகத்தில் கதவு நெளிந்து, திறக்க முடியாமல் போனதால் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் அஸ்வின் சுந்தரும், அவரது மனைவி நிவேதிதாவும் உடல் கருகி உயிரிழந்தனர்.
வாழ்வின் பெரும்பகுதியை கார்களுடனே கழித்த அஸ்வினுக்கு, வாழ்வின் இறுதிப்பயணமும் காரிலேயே முடிந்திருக்கிறது. அஸ்வின் சென்ற கார் டயர் வெடித்து இந்த விபத்து நிகழ்ந்திருக்கக் கூடும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. சாஸ்திரி நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் இந்த விபத்து பற்றி விசாரித்து வருகிறார்கள். இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. அதிவேக பந்தய கார்களை அனாயசமாக கையாண்ட அஸ்வினின் இறுதி முடிவு அவரது பெற்றோரையும் நண்பர்களையும் மட்டுமின்றி அனைவரையும் கலங்கவைத்துள்ளது.

