மசாஜ் சென்டரை திறக்க லஞ்சம்... அசோக்நகர் காவல் உதவி ஆணையர் கைது
சென்னையில் மூடப்பட்ட மசாஜ் சென்டரை மீண்டும் திறக்க 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, அசோக்நகர் காவல் உதவி ஆணையர் வின்சென்ட் ஜெயராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அசோக் நகரில் இயங்கி வந்த செந்தில்குமரன் என்பவரது மசாஜ் சென்டரில் முறைகேடான செயல்கள் நடப்பதாகக் கூறி அதை மூட உதவி ஆணையர் வின்சென்ட் ஜெயராஜ் உத்தரவிட்டார். அதை மீண்டும் திறக்க அனுமதி வழங்குமாறு வின்சென்ட் விண்ணப்பித்துள்ளார். அப்போது 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் அனுமதியளிப்பதாக வின்சென்ட் ஜெயராஜ் கூறியுள்ளார்.
இதனால் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் செந்தில்குமரன் புகார் அளித்தார். அவர்களது யோசனைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அசோக் நகர் காவல் நிலையத்தில் வைத்து வின்சென்ட் ஜெயராஜிடம் செந்தில்குமரன் அளித்தார். பணத்தை உதவி ஆணையர் வாங்கியபோது, லஞ்சஒழிப்புத் துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும், உதவி ஆணையருக்கு அரசு வழங்கிய வாகனத்தில் சோதனை நடத்தப்பட்டது. பூவிருந்தவல்லியில் உள்ள உதவி ஆணையர் வின்சென்ட் ஜெயராஜின் வீட்டிலும் அவர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.