அசோக் குமார் தற்கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை
திரைப்பட தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலை செய்துகொண்டது தொடர்பான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
நடிகரும், இயக்குநருமான சசிகுமாரின் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் இணைத் தயாரிப்பாளராக இருந்தவரும், அவரது உறவினருமான அசோக்குமார் கடந்த மாதம் 21ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அதற்கு சினிமா பைனான்சியர் அன்புச்செழியன்தான் காரணம் என்று கூறி சசிகுமார் அளித்த புகாரின் பேரில், கந்துவட்டி கேட்டு மிரட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் அன்புச்செழியன் தாக்கல் செய்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி, மனு தொடர்பாக பதில் அளிக்கும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார், சென்னை காவல் ஆணையர் மற்றும் நடிகர் சசிகுமாருக்கு உத்தரவிட்டார். அத்துடன் ஜனவரி 29ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை விசாரணைக்கும் தடை விதித்தார்.