2ம் வகுப்புப் பாடத்தைப் படிக்க முடியாத 8ம் வகுப்பு மாணவர்கள்
தமிழக பள்ளிகளில் பயிலும் 8ம் வகுப்புப் பயிலும் மாணவர்களில் 73.1 சதவீதம் மாணவர்களுக்கே 2ம் வகுப்புப் பாடத்தைப் படிக்க முடிகிறது என்று பள்ளிக் கல்வியின் தரம் குறித்த அசர் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ப்ரதம் என்ற தொண்டு நிறுவனத்தின் ஆதரவுடன் நாடுமுழுவதும் பள்ளிக்கல்வியின் நிலை குறித்து ‘அசர் அறிக்கை’ (ASER Report) என்ற ஆய்வறிக்கை கடந்த 2005ம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் 5ம் வகுப்புப் பயிலும் மாணவர்களில் 47.8 சதவீதம் மாணவர்களுக்கே 2ம் வகுப்பு பாடத்தைப் படிக்கத் தெரிகிறது என்றும் அதே போல் 8ம் வகுப்பு மாணவர்களில் 73.1 சதவீதம் பேருக்குத்தான் 2ம் வகுப்பு பாடத்தைப் படிக்க முடிகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளி செல்லும் மூன்றில் ஒரு மாணவருக்கு அடிப்படை கணிதம், தமிழ் மற்றும் ஆங்கிலம் தெரியவில்லை. தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களின் தமிழ் படிக்கும் திறன் தொடர்ந்து குறைந்து வருவதாகவும், அதேநேரத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

