`தமிழகத்தில் ஒரு அரசு மருத்துவமனையில் கூட செயற்கை கருத்தரித்தல் மையம் இல்லை’- RTI-ல் தகவல்

`தமிழகத்தில் ஒரு அரசு மருத்துவமனையில் கூட செயற்கை கருத்தரித்தல் மையம் இல்லை’- RTI-ல் தகவல்
`தமிழகத்தில் ஒரு அரசு மருத்துவமனையில் கூட செயற்கை கருத்தரித்தல் மையம் இல்லை’- RTI-ல் தகவல்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையம் ஒன்று கூட இல்லாததால், ஏழை தம்பதியினர் தனியாரில் லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் தற்போது குழந்தையின்மை பிரச்சனை தம்பதியினரிடம் அதிகரித்து வருகிறது. வசதியுள்ளவர்கள், கடன் வாங்கி வைத்தியம் பார்க்கும் நடுத்தரவர்க்க தம்பதியினர் ஒரளவுக்கு இச்சிகிச்சைகளை மேற்கொண்டு குழந்தை பாக்கியம் பெறுகின்றனர். ஆனால் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மிகவும் பின்தங்கிய ஏழை தம்பதியினர் அரசு மருத்துவமனைகளை மட்டுமே நம்பியுள்ளனர்.

மாவட்டத்திற்கு மாவட்டம் தொடர்ந்து தனியார் கருத்தரித்தல் மையங்கள் தொடங்கப்பட்டுவரும் நிலையில் சென்னையில் 59, கோயமுத்தூரில் 14, மதுரையில் 11 மையங்கள் என்ற தமிழ்நாடு முழுவதும் 26 மாவட்டங்களில் மொத்தம் 155 தனியார் கருத்தரித்தல் மையங்கள் செயல்படுகின்றன. ஆனால் தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், 40க்கும் மேற்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனைகள் செயல்பட்டுவந்தாலும் ஒரு அரசு மருத்துவமனைகளில்கூட கருத்தரித்தல் மையம் வசதி கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பல்வேறு அதிநவீன சிகிச்சைகள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்தவமனைகளில் அரசே ஏற்படுத்திவரும் நிலையில் கருத்தரித்தல் சிகிச்சைகக்கான வசதிகள் ஏற்படுத்துவதில் தமிழக சுகாதாரத்துறை தொடர்ந்து காலதாமதம் ஏற்படுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது.

குழந்தையின்மை தீர்வுக்கான கருத்தரித்தல் சிகிச்சைக்காக கருத்தரித்தல் மையங்களில் PGD-IVF, Intracytoplasmic Sperm Injection(ICSI), Morphologically Selected Sperm Injection(IMSI), Laser Hatching, PGD Sperm bank, Egg bank, Embryo bank, Time Lapse, Fibroid clinic, Laparoscopic Surgery உள்ளிட்ட தேவையான மருத்துவ கட்டமைப்பு வசதிகளும் சிகிச்சைகளும் தேவைப்படுகிறது. இவை எதுவும் அரசு மருத்துவமனைகளில் இல்லாததால், தினந்தோறும் நூற்றுக்கணக்கான தம்பதியினர் அரசு மருத்துவமனைகளில் குழந்தையின்மைக்கான சிகிச்சை வசதியில்லை என்பதால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். குறிப்பாக அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் தேவைகேற்ப மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் இச்சிகிச்சைக்கு சம்பந்தப்பட்ட மருத்துவர்களும் துறை வல்லுனர்களும் உள்ளனர் என்றபோதிலும் இதற்கான எந்த முயற்சியும் மருத்துவமனை நிர்வாகத்தினரும், மாநில சுகாதாரத்தறையினரும் ஏற்படுத்தாமல் அலட்சியப்படுத்தி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இந்நிலையில் தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் இந்தாண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு மருத்துவக்கல்லூரி இயக்ககம் அளித்த தகவலின் அடிப்படையில் தமிழகத்தில் ஒரு அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில்கூட இச்சிகிச்சை வசதியை ஏற்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.

தகவல் பெறும் உரிமைச்சட்டத்தில் தெரியவரும் பிற தகவல்கள் மற்றும் கள நிலவரம்:

மத்திய அரசு மருத்துவமனைகளான எய்ம்ஸில் கடந்த 2007ம் ஆண்டே இந்த வசதியை ஏற்படுத்தியுள்ளனர். மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திரா மற்றும் கேரளா அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இச்சிகிச்சை வசதியை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை வசதியை அரசு ஏற்படுத்தாமல் இருப்பதால், மக்கள் முழுக்க முழுக்க தனியார் மருத்துவமனைகளை நம்பியிருக்க வேண்டியுள்ளது.

இந்தியாவில் குழந்தையின்மை பிரச்சனையால் சுமார் 2.75 கோடி தம்பதியனர் பாதிக்கப்பட்டுள்ளனர். நகர்புறப்பகுதிகளில் 6 தம்பதியினர் ஒருவருக்கு குழந்தையின்மை பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வில தகவல்  வெளியாகியுள்ளது. தமிழகத்திலும் குழந்தையின்மை தம்பதியினர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. உடல்ரீதியாகவும் மட்டும் அல்லாமல் மனரீதியாகவும், குடும்ப சூழ்நிலையில் கணவன் மனைவி விவகாரத்து வரை சென்றுவிடுகிறது. `எவ்வளவு செலவானாலும் பராவில்லை, கடன்பட்டாவது குழந்தை பாக்கியம் பெறவேண்டும்' என்று தம்பதிகளின் எதிர்பார்பை நன்கு புரிந்து தனியார் மையங்களில் இச்சிகிச்சைக்கு லட்சக்கணக்கல் கட்டணமாக வசூல் செய்கின்றனர் என்று மக்களும் மருத்துவ செயர்பாட்டாளர்களும் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் வெரோனிகா மேரி கூறுகையில், ''மதுரை, தேனி, சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி, கரூர், தஞ்சாவூர், சேலம், தருமபுரி, விழுப்புரம், சென்னை, கோயமுத்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின்  அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில்  PGD-IVF, Intracytoplasmic Sperm Injection(ICSI), Morphologically Selected Sperm Injection(IMSI), Laser Hatching, PGD Sperm bank, Egg bank, Embryo bank, Time Lapse, Fibroid clinic, Laparoscopic Surgery உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன்கூடிய கருத்தரித்தல் மையங்களை ஏற்படுத்தி இலவசமாக சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருகிவரும் தனியார் கருத்தரித்தல் மையங்கள் (Fertility centers) கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் கார்ப்பரேட் தொழிலாக மாறி வருகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கருத்தரித்தல் மையம் சிகிச்சை தொடங்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது'' என்றார்.

சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் கூறுகையில், ''ஏழை எளிய நடுத்தர மக்கள் குழந்தையின்மையினால் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இதனால் குடும்பத்தில் வன்முறை ஏற்படுகிறது. அதிக செலவு செய்து தனியார் மையத்தில் சிகிச்சை பெற முடியாத சூழல் இங்கே இருக்கிறது. தனியாருக்கு சாதகமாக அரசு செயல்படுகிறதோ என்ற அச்சத்தை இது தருகிறது'' என்றார்.

பொதுமக்கள் தரப்பில் “மதுவினால் பல ஆண்கள் ஆண்மை இழந்து வருகிறார்கள் என்பதை அனைவரும் அறிந்த ஒரு விஷயம். எனவே அரசு மருத்துவமனையில் கருத்தரித்தல் மையத்தை புதிதாக உருவாக்க தமிழக அரசு முன்னுர வேண்டும். 5 லட்சம் ரூபாய் செலவு செய்து தனியார் நிறுவனத்தில் கருத்தரித்தல் மையம் மூலம் குழந்தை பெற்றவர்கள் இங்கு ஏராளம். தனியார் நிறுவனத்தில் சேவை என்பது நோக்கமாய் இருக்காது. பணம் மட்டுமே முழு நோக்கமாய் இருக்கிறது அரசு மருத்துவமனையில் இந்த சேவை கொண்டு வந்தால் ஏழை எளிய மக்கள் அதிக அளவில் பயன்பெறுவார்கள். எனவே விரைவில் அரசு மருத்துவமனையில் இந்த சிகிச்சை கொண்டு வரப்பட வேண்டும்'' என்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com