“கணக்கீடு செய்ய ஆள் இல்ல... பழைய கட்டணத்தையே மீண்டும் கட்டுங்க”- விளம்பரம் கொடுத்த மின்வாரிய ஊழியர்!

திருவாரூர்: கணக்கீடு செய்வதற்கு ஆள் இல்லாததால் ஜூன் மாதம் கட்டிய மின் கட்டணத்தையே ஆகஸ்ட் மாதமும் கட்டுங்கள் என வடபாதிமங்கலம் உதவி மின் பொறியாளர் செய்தித்தாள்களில் அறிவிப்பு கொடுத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது வடபாதிமங்கலம் பராமரிப்பு மற்றும் துணை மின் நிலையம்.  இங்கிருந்து பல கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

திருவாரூர் மாவட்டம்
திருவாரூர் மாவட்டம்புதியதலைமுறை

இந்த நிலையில் மின் கணக்கீடு செய்வதற்கு ஆள் இல்லாததால் ஆறாவது மாதம் (ஜூன்) கட்டிய மின் கட்டணத்தையே எட்டாவது மாதமும் (ஆகஸ்ட்) கட்டுங்கள் என வடபாதிமங்கலம் உதவி மின் பொறியாளர் பிரேம் என்பவர் விளம்பரம் கொடுத்துள்ளார். கானூர், சித்தாம்பூர், பழையனூர், வெள்ளக்குடி, வேளுக்குடி, சாத்தனூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு அறிவிக்கும் விதமாக தினசரி செய்தித்தாள்களில் இந்த விளம்பரத்தை கொடுத்திருக்கிறார் அவர்.

இதைக் கண்ட பொதுமக்கள் குழப்பம் அடைந்துள்ளார்கள். காரணம், ஜூன் மாதம் தாங்கள் பயன்படுத்திய மின்சார அளவு என்ன என்பது அவர்களுக்கு தெரியவில்லை. இதனால் எவ்வாறு பணம் கட்டுவது என அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

வடபாதிமங்கலம் மின்சார வாரிய அறிவிப்பு
வடபாதிமங்கலம் மின்சார வாரிய அறிவிப்பு

மேலும்  ஆறாவது மாதம் கோடைக்காலம் என்பதால் அப்பொழுது அதிகளவு மின்கட்டணம் கட்டபட்டிருக்கும்; தற்பொழுது  பயன்படுத்திய மின்சார அளவு குறைந்திருக்கும். ஆகையால் எவ்வாறு அதையே கட்டுவது என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இது குறித்து தமிழக மின்சார வாரியத்தை தொடர்புகொண்டு பேசினோம். அப்போது அதிகாரிகள், ‘விளம்பரம் கொடுத்த உதவி மின் பொறியாளர் மீது துறை ரீதியிலான உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com