தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வாக்குப்பதிவு | 2021 - 2026 ஒப்பீடு காட்டுவது என்ன?
காலையில் இருந்தே தமிழக சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 9 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 17.69 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 13.80 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவான நிலையில், இந்த ஆண்டு அதனைவிட 3.89 சதவீதம் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 80 சதவீதத்துக்கும் அதிக வாக்குகள் பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் 78.12 சதவீத வாக்குகள் பதிவானது. இதுவே, இதுவரை தமிழ்நாட்டில் பதிவான அதிகபட்ச வாக்கு சதவீதமாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு வாக்குப்பதிவு இதனைவிட அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த SIR பணிகளைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் இருந்து 74.07 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். இந்த சூழலில் தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளதற்கு இது முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
மேற்குவங்கத்திலும் காலை 9 மணி நிலவரப்படி 18.76 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்களிலும் வாக்குச் சதவீதம் அதிகரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

