ஜெயலலிதா சொன்னது போல் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை – திருமாவளவன்

ஜெயலலிதா சொன்னது போல் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை – திருமாவளவன்
ஜெயலலிதா சொன்னது போல் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை – திருமாவளவன்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொன்னது போல கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்ற நிலை தற்போது திமுக கூட்டணிக்கு ஏற்பட்டுள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

திருவாரூர் அம்மையப்பன் பகுதியைச் சேர்ந்த விசிக நிர்வாகி கவியரசன் என்பவர் சில நாடகளுக்கு முன்னதாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய பாஜக குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 2000 க்கும் மேற்பட்ட விசிக தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்

அப்போது கவியரசன் குடும்பத்திற்கு விசிக சார்பாக 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை திருமாவளவன் கவியரசனின் குடும்பத்திற்கு வழங்கினார். இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது...

பாஜக, ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் வன்முறைகளை தூண்டி படுகொலைகளை செய்து அதன் மூலம் திமுக அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் செயல்களை செய்து வருகிறது. கிரிமினல்களை கட்சியில் சேர்ப்பதற்கு அச்சப்படாத கூச்சப்படாத கட்சி பாஜக. பாஜகவில் ஊடுருவியிலுள்ள கிரிமினல்களை அரசு கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க முடியும். திமுக அரசுக்கு எதிரான நடவடிக்கைகளையும் தடுக்க முடியும்.

நெல் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முதல்வர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. திமுக தலைமையில் வலுமையான கூட்டணி அமைய வேண்டும் என்பதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அந்த வகையில் கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருப்பதை வரவேற்கிறோம். அகில இந்திய அளவில் பாஜக-வை தனிமைப்படுத்தும் வகையில் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்.



அதிமுக-வை பொருத்தவரை வாழ்வா சாவா என்ற போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அதிமுக இன்று மதவாத சக்திகளின் பிடியில் சிக்கி மூன்று அணிகளாக பிரிந்து இருக்கிறது. பாஜக தலையிடாமல் இருந்திருந்தால் சசிகலா தலைமையில் இந்த கட்சி ஒரே கட்சியாக இருந்திருக்கும். அதிமுகவை இரண்டாக பிளவுபடுத்தி பலவீனப்படுத்தி அதிமுக தலைமையிலான அணியே இந்த இடைத்தேர்தலில் காணாமல் போய்விட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொன்னது போல கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் எதிரிகளே இல்லை என்ற கருத்து தற்போது திமுக கூட்டணிக்கு ஏற்பட்டு இருக்கிறது.

அதிமுகவின் இந்த நிலைக்கு காரணம் பிஜேபியின் சதித்திட்டம் தான். இதை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் அதிமுகவுக்கு நல்லது. விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் தான் இருக்கிறது. திமுக கூட்டணியில் தான் தொடரும். திமுக கூட்டணி இன்னும் வலிமை பெறும். திமுக கூட்டணி தமிழகத்தில் 40-க்கு 40 வெற்றி பெறும். அதிமுகவை பலவீனபடுத்தி மத சக்தியாக இருக்கும் பாஜக இங்கு காலூன்ற நினைப்பது நல்லதல்ல. எனவே அதிமுக தன்னை வலுபடுத்திக் கொள்ளும் போது தான் பாஜகவை விரட்டியடிக்க முடியும்.

பிபிசி ஆவண படம் குறித்து கேட்டபோது.. இதே பிரதமர் மோடி தான் தொடக்க காலத்தில் குஜராத்தில் முதல்வராக இருந்தார். அப்போது இந்திய ஊடகங்கள் நம்பாதீர்கள், பிபிசி நம்பிக்கைக்குறிய நிறுவனம். அதில் வரும் கருத்துகளை மட்டும் நம்புங்கள் என்று கூறி இருக்கிறார். இன்று அவரைப் பற்றி கொடூரமான உண்மை முகத்தை பிபிசி அம்பலப்படுத்திய உடன் இதனை கற்பனை என்கிறார். அதில் உள்ள ஒவ்வொரு காட்சியும் ஏற்கனவே நாம் அனைவரும் பார்த்து கேட்ட காட்சி தானே. இதில் எதுவும் புதிதாக இல்லை. சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பாஜக கட்சியினரே பேட்டி கொடுக்கிறார்கள். மோடி எவ்வாறு தங்களை காப்பாற்றினார் என்பதை வெளிப்படையாக பேட்டி கொடுத்திருக்கிறார்கள் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com