அருப்புக்கோட்டை அருகே சாலை விபத்து: கூலித்தொழிலாளர்கள் மூவர் உயிரிழப்பு
அருப்புக்கோட்டை அருகே சாலை விபத்து: கூலித்தொழிலாளர்கள் மூவர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புறவழிச்சாலையில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகே சரக்கு வாகனத்தின் மீது கார் மோதியதால் விபத்து ஏற்பட்டது.
அருப்புக்கோட்டை தண்டியநேந்தல் கிராமத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் காட்டு வேலைக்காக சரக்கு வாகனத்தில் தண்டியநேந்தல் அருகே உள்ள பந்தல்குடியை நோக்கி சென்றுள்ளனர். வாகனம் அருப்புக்கோட்டை புறவழிச் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த கார் ஒன்று அதன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் சரக்கு வாகனம் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் சரக்கு வாகனத்தில் பயணம் செய்த விஜயலட்சுமி மற்றும் பழனியம்மாள் ஆகிய இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த அருப்புக்கோட்டை காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும் உயிருக்கு போராடி கொண்டிருந்த 18 க்கும் மேற்பட்டோரை ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு துறை வாகனத்தின் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாரி என்பவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த 18க்கும் மேற்பட்டோருக்கு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த 3 பேரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவனை வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்