மேட்டூர்: சுடுகாட்டில் உடலை அடக்கம்செய்ய அனுமதி மறுப்பதாக இஸ்லாமியர்கள் போராட்டம்! போலீசார் குவிப்பு

மேட்டூர் அருகே இஸ்லாமிய சமுதாயத்தினர் 90 ஆண்டுகளாக பயன்படுத்திவந்த சுடுகாட்டை இனி பயன்படுத்தக்கூடாது என மாற்று சமூகத்தினர் தடுத்து நிறுத்தியதால் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே கிழக்கு காவேரிபுரம் கிராமத்தில் கடந்த 90 ஆண்டுகளுக்கு மேலாக இஸ்லாமிய சமுதாயத்திற்கு என்று தனியாக சுடுகாடு இருந்துவருகிறது.

இந்த நிலையில் இஸ்லாமியர்களின் சுடுகாடு அருகே அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்த சூழலில் அங்கு வசித்துவரும் அருந்ததியர் மக்கள் இஸ்லாமியர்கள் பயன்படுத்திவந்த சுடுகாட்டை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு, இனி அங்கு சடலத்தை புதைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருவதாக இஸ்லாமியர்கள் குற்றஞ்சாட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சடலங்களை அடக்கம் செய்ய மறுத்த மாற்று சமூகத்தினர்!

கடந்த மாதம் பாபாஜி சாயிப் என்பவர் உயிரிழந்த நிலையில் அவரது சடலத்தை அடக்கம் செய்ய விடாமல் தடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்குபிறகு இன்று முன்னாள் மின்வாரிய ஊழியர் உஜிரா பாய் வயதுமூப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது சடலத்தை இஸ்லாமியர்களுக்கு சொந்தமான சுடுகாட்டில் அடக்கம் செய்ய வந்தபோது மீண்டும் அருந்ததியர் மக்கள் தடுத்து நிறுத்தியதால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

இது குறித்து தகவல் அறிந்த மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் மரியமுத்து, அங்கு எவ்வித பிரச்னையும் ஏற்படாத வண்ணம் அவரது தலைமையில் மேட்டூர் மற்றும் ஓமலூர் காவல் கோட்டத்திற்கு உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாரை சம்பவ இடத்திற்கு வரவழைத்தார். ஆனாலும் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள், அருந்ததியர் சமூகத்தினர் இஸ்லாமியர்களின் சுடுகாட்டை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு சடலத்தை அடக்கம் செய்ய விடாமல் தடுப்பதை கண்டித்தும், இதற்கு ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர கோரியும்” காவேரிபுரம் பேருந்து நிறுத்தத்தில் தொடர்ந்து நான்கு மணி நேரமாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர.

காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய போதும் இஸ்லாமியர்கள் நிரந்தர தீர்வு ஏற்படும் வரை மறியலை கைவிட மாட்டோம் என்று கூறிய நிலையில், காவல்துறையினர் அருந்ததியர் மக்களிடம் சுமூக பேச்சுவார்த்தை நடத்தியதற்கு பிறகு சடலத்தை அடக்கம் செய்ய அனுமதித்தனர். இருந்த போதிலும் இஸ்லாமியர்கள் மற்றும் அருந்ததியர்களுக்கு இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவி வருவதால் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com