"எங்களைக் குறித்து கேவலமான வார்த்தைகளால் பேசியிருக்கிறார் சீமான்"- அருந்ததியர் சங்கம்

"எங்களைக் குறித்து கேவலமான வார்த்தைகளால் பேசியிருக்கிறார் சீமான்"- அருந்ததியர் சங்கம்
"எங்களைக் குறித்து கேவலமான வார்த்தைகளால் பேசியிருக்கிறார் சீமான்"- அருந்ததியர் சங்கம்

சீமான் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என்றும், அருந்ததியர் குறித்த பேச்சுக்காக சீமான் கட்டாயம் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அனைத்துலக அருந்ததியர் மக்கள் இயக்கத்தின் தலவைர் முனுசாமி தெரிவித்துள்ளார்.

அனைத்துலக அருந்ததியர் மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் முனுசாமி சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பிப்ரவரி 26ஆம் தேதி கலைஞர் கருணாநிதி, அருந்ததியர்களுக்கு 3% இட ஒதுக்கீட்டை வழங்கிய நாள். இது எங்கள் சுதந்திர தினம். ஆனால் பெயருக்காக இந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டதே தவிர, இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இதை செயல்படுத்தியிருந்தால் எங்கள் சமூகம் முன்னேறி இருக்கும்.

கல்வியில், வேலைவாய்ப்பில் கொடுக்கப்பட்டதைப் போன்று, அரசியல் பதவிகளுக்கும், இதே 3% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் தான் அருந்ததியினரும் MLA, MPஆக முடியும்.

அருந்ததியர்களாகிய நாங்கள் வந்தேறிகள் என கூறியுள்ளார் சீமான். இது தவறு, நாங்கள் வந்தேறிகள் கிடையாது. கேவலமான வார்த்தைகளை, எங்களைக் குறித்து பேசியிருக்கிறார். அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இந்த பேச்சுக்காக சீமான் கட்டாயம் கைது செய்யப்பட வேண்டும்.

நாங்கள் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள். இதற்கான வரலாறு உள்ளது. தஞ்சை கோவிலை கட்டும் பணியில் ஈடுபட்டது உள்ளிட்ட பல வேலைகளில் ஈடுபட்டவர்கள் அருந்ததியர்கள். ஒண்டி வீரன் யார்?. எங்கள் தாய்மொழி தெலுங்கு தான். தெலுங்கு தான் பேசுகிறோம். ஆனால் ஒண்டிவீரனும், பூலித்தேவனும் தெலுங்கு பேசியவர்கள் தானே. இல்லை என்பீர்களா? தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு பேசும் பிற சமுதாய மக்களை சீமான் இப்படி பேசுவாரா?. எங்களை அவமானப்படுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டார் சீமான். காலம் காலமாக இங்கே வாழ்பவர்களை எப்படி வந்தேறிகள் என்று சொல்வீர்கள்?.

திருமாவளவன் எங்களுக்காக ஒரு காலமும் குரல் கொடுப்பதில்லை. எங்களுக்கு என்ன அநியாயம் நடந்தாலும் அவர் கேட்பதில்லை. வன்முறை யார் செய்தாலும் நாங்கள் கண்டிக்கிறோம். எந்த கட்சியில் இருந்தாலும் அருந்ததியர்களுக்கு பாதுகாப்பு இல்லை. சீமானின் பேச்சு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எந்த கண்டனமும் தெரிவிக்காதது, எங்களுக்கு மிகுந்த வருத்தமளிக்கிறது. 2000லிருந்து தொடர்ந்து அருந்ததியர்கள் திமுகவை மட்டுமே ஆதரித்து வருகிறோம். ஆனால், ஈரோடு இடைத்தேர்தலில் சீமானைத் தவிர யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள்” என்று எங்கள் மக்களிடம் தெரிவித்துவிட்டோம் என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com