ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு எத்தனை கோடி செலவு தெரியுமா?

ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு எத்தனை கோடி செலவு தெரியுமா?
ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு எத்தனை கோடி செலவு தெரியுமா?

ஜெயலலிதா மரண விசாரணை முடிவடைந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தால் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது விசாரணைக்காக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கான செலவுகள் கணக்கிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் பற்றி சர்ச்சை எழுந்த நிலையில், மரணம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க கூறி நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் 2017 செப்டம்பரில் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்படுவதற்கு முன் உடல்நிலை எப்படி இருந்தது? என்பதில் தொடங்கி, விரிவான விசாரணையை 154 பேரிடமும் நடத்தியது ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம். 5 ஆண்டுகளாக நீடித்த விசாரணை முடிவடைந்த நிலையில், ஆங்கிலத்தில் 500 பக்கமும் தமிழில் 608 பக்கமும் கொண்ட அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்தார் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி.

முன்னர் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கேட்டு அப்போலோ தொடர்ந்த வழக்கில், ஆணைய விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. அந்த தடையை நீக்க எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் முயற்சிகள் எடுக்கப்படவில்லை. அதனால் “உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த மேல்முறையீட்டு வழக்கில் தமிழக அரசின் வழக்கறிஞரும், கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞரும் அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்கள்” என்ற குற்றச்சாட்டை அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஆணையம் கூறியிருந்தது.

மேலும் ’ஆறுமுகசாமி விசாரணை கமிஷனை ஈபிஎஸ், ஓபிஎஸ் பதவி சுகத்திற்காக முடக்கி வைத்திருக்கிறார்கள்’’ என அன்றைக்கு எதிர்க் கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். 

பின்னர் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு உச்சநீதிமன்றத்தில் இருந்த தடையை நீக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. 

இந்நிலையில் இந்த ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு ஆன செலவுகள் பிரத்தியேகமாக கிடைத்துள்ளது. அதன்படி நீதிபதி மற்றும் அலுவலர்களின் அடிப்படை சம்பளம், மருத்துவப் படி, வீட்டு வாடகைப் படி, நகர ஈட்டுப்படி, அகவிலைப்படி, பயணச் செலவுகள், தொலைபேசிக் கட்டணம், சில்லறைச் செலவுகள், தபால் செலவு, வாகனங்கள் வாங்குதல் மற்றும் பராமரிப்பு, அரசு வழக்கறிஞர்கள் கட்டணம், ஒப்பந்த ஊதியம், வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் கம்பியூட்டர், ஸ்டேஷனரி என ஒரு விசாரணை ஆணையத்தை நடத்த ஏகப்பட்ட செலவுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.

இந்த வகையில் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனுக்கு மட்டும்,
2017-2018 ஆண்டில் 30,05,000 ரூபாயும்
2018-2019 ஆண்டில் 83,06,000 ரூபாயும்
2019-2020 ஆண்டில் 1,08,31,000 ரூபாயும்
2020-2021 ஆண்டில் 1,03,25,000 ரூபாயும்
2021-2022 ஆண்டில் 1,04,53,000 ரூபாயும்
2021-2022 ஆண்டில் 51,92,000 ரூபாயும் செலவிட்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டால் மொத்தமாக 4 கோடியே 81 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது.

6 நிதியாண்டில் கடைசி இரண்டு ஆண்டுகளுக்கான செலவை மட்டுமே தி.மு.க ஆட்சி செய்தது. மிக அதிகபட்சமாக 2019-2020 ஆண்டில் 1,08,31,000 ரூபாய் செலவிடப்பட்டது. ஆணையம் அமைக்கப்பட்ட 2017-2018 நிதியாண்டில்தான் மிகக் குறைவான தொகை செலவிட்டிருக்கிறார்கள். இந்த பணம் அத்தனையும் அரசின் வரிப்பணம்தான்.

அரசு வழக்கு நடத்துநர் கட்டணம் மட்டுமே 2020-21-ம் ஆண்டில் 30,21,000 ரூபாயும் 2021-22-ம் ஆண்டில் 32,51,000 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் அப்போலோ வாங்கிய தடையை நீக்க எடப்பாடி பழனிசாமி அரசு முயற்சிகள் எடுத்திருந்தால் ஆணையத்தின் காலம் குறைந்து, செலவுகள் குறைக்கப்பட்டிருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

அப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த 75 நாட்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை செலவு 6 கோடி ரூபாய் என்றால் ஜெயலலிதாவின் மரணத்தை விசாரித்த விசாரணை ஆணையத்துக்கு 4.81 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

-ரமேஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com