வாழ்வின் அழகியலை பேசும் ஒரு கலைத்திருவிழா

வாழ்வின் அழகியலை பேசும் ஒரு கலைத்திருவிழா

வாழ்வின் அழகியலை பேசும் ஒரு கலைத்திருவிழா
Published on

சென்னையில் நுண்கலை மாணவர்களால் நடத்தப்படும் கலைத் திருவிழா ஒன்று நடைப்பெற்று வருகிறது.

பொங்கல் விடுமுறை தொடங்கிவிட்டது. மொத்தமாக ஆறு நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளது. பலர் சொந்த ஊருக்கு தமிழர்த் திருநாளைக் கொண்டாட கிளம்பி இருப்பார்கள். சென்னையிலேயே பொங்கல் கொண்டாட இருப்பவர்கள் இந்த விடுமுறை எப்படி இனிமையாக மாற்றலாம்? குழந்தைகளோடு எங்கே செல்லலாம்? அப்படி போகக் கூடிய இடம் வழக்கமான அனுபவத்தை கொடுக்காமல் ஒரு ஸ்பெஷல் அனுபவத்தை கொடுக்கக் கூடிய இடமாக இருந்தால் நல்லது என யோசிக்கிறீர்களா நீங்கள். அப்போது உங்களுக்கு ஒரு அழகான கலை அனுபவத்தை கொடுக்க காத்திருக்கிறது ‘வி.ஆர் மால்’.

சென்னை அண்ணாநகரிலுள்ள ‘வி.ஆர் மால்’ இந்தப் பொங்கல் விடுமுறை காலத்தையொட்டி ஒரு ‘கலைத் திருவிழா’வை தொடங்கியுள்ளது. இந்த விழா நேற்றுதான் தொடங்கியுள்ளது. இன்னும் அடுத்த மாதம் 11 தேதிவரை நடைபெற உள்ளது. கலைநயமான இந்தத் திருவிழாவில் என்ன ஸ்பெஷல்? போனால் என்ன மாதிரியான அனுபவம் கிடைக்கும்? என கேட்பவர்களுக்கு ஒரு சின்ன விளக்கம். 

இந்தத் திருவிழா முழுக்க முழுக்க கலை ஆர்வம் கொண்டவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் கும்பகோணம் ஓவியக் கல்லூரி மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட கலைப் பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதாவது இங்கே வைக்கப்பட்டுள்ள கலைப் பொருட்கள் யாவையும் வழக்கமான பொருட்கள் இல்லை என்பது ஒரு சிறப்பான செய்தி. 

அப்படி என்ன சிறப்பு?

நிறைய இருக்கிறது. நாம் எதை எல்லாம் தேவையில்லை என்று தூக்கி எறிகின்றோமோ அதற்கெல்லாம் மீண்டும் மறு உயிர்க்கொடுத்து இங்கே அவற்றை கலைப் பொருட்களாக மாற்றி காட்சிக்கு வைத்துள்ளார்கள் மாணவர்கள். நவீனக் கலை ஆர்வம் கொண்டவர்கள் இந்தத் திருவிழாவிற்கு நிச்சயம் போகலாம். அதேபோல் குழந்தைகள் கண்டிப்பாக இந்த விழாவை அதிகம் விரும்புவார்கள்.

விதவிதமாக வைக்கப்பட்டிருக்கும் பொம்மைகள் அவர்கள் சந்தோஷத்திற்கு அதிகம் தீனி போடும். தேங்காய் நாரில் செய்யப்பட்ட ஒரு மனித குரங்கு சிற்பம் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல சிகப்பு நிறத்திலான ஒரு அழகு தேவதை சிற்பம் காண்போரை ஈர்க்கும்படி உள்ளது. இந்தச் சிற்பம் ஒரு பெண்ணின் அக உலகத்தையும் வாழ்வியல் சிக்கலையும் அழகாக எடுத்து கூறும் நோக்கில் செய்யப்பட்டுள்ளதாக அதனை வடிவமைத்த மாணவர் விளக்கம் அளித்துள்ளார்.

நாம் வீட்டில் பயன்படுத்திவிட்டு வேண்டாம் என தூக்கி வீசிய டேபிள்ஃபேனின் வலையை வைத்து மிக அழகாக ஒரு பூமிப் பந்தை உருவாக்கி வைத்துள்ளார்கள். அதை பார்க்கவே சந்தோஷமாக இருந்தது. இவைகளை மீறி, அழகான தேர் சிற்பம், தஞ்சை பெரியக் கோயிலிலுள்ள நந்தி சிற்பம், மெகா சைஸ் கோயில் மணி ஒன்று, நம் குழந்தைகள் விளையாட மறந்துபோன நடை வண்டிச் சிற்பம், கேரள பாரம்பரியத்தை எடுத்து கூறும் கதக்களி சிற்பம் என திரும்பும் திசை முழுக்க கண்களை ஈர்க்கிறது இந்தத் திருவிழா. ஆக, இதைப் போல 60 வகையான சிற்பங்கள் காட்சிகளும் விதவிதமான ஓவியங்களும் ஒருங்கே இங்கே வரிசை செய்யப்பட்டுள்ளன.

அது சரி, இந்தக் கலை விழாவிற்கு ஏதேனும் கட்டணம் உண்டா?

அப்படி ஒன்றுமேயில்லை. யார் வேண்டுமானாலும் செல்லலாம். காலை வழக்கம் போல் பத்து மணிக்கு சென்றால் இரவு வரை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். இந்தக் கலை விழா முதன்முறையாக சென்னையில் நடக்கிறது. இதற்கு முன் பெங்களூருவில் நடந்துள்ளது. இந்த விழா 2013ல் முதன்முதலில் சூரத்தில்தான் தொடங்கப்பட்டுள்ளது. ஆக, பல மாநிலங்களைக் கடந்து தமிழ்நாட்டிற்கு வந்துள்ள இந்த விழாவை இந்தப் பொங்கல் விடுமுறையை பயன்படுத்தி நீங்கள் கண்டுகளிக்க தயாரா? 
   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com