’அவரிடம் நியாயம் இருந்தது’ - நன்றி சொன்ன பேரறிவாளனுக்கு கிடார் பரிசளித்த திருமாவளவன்!

’அவரிடம் நியாயம் இருந்தது’ - நன்றி சொன்ன பேரறிவாளனுக்கு கிடார் பரிசளித்த திருமாவளவன்!
’அவரிடம் நியாயம் இருந்தது’ - நன்றி சொன்ன பேரறிவாளனுக்கு கிடார் பரிசளித்த திருமாவளவன்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்துவந்த நிலையில், சமீபத்தில் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள், அசோக் நகர் அம்பேத்கர் திடலில் விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள், “31 ஆண்டு தொடர் போராட்டத்தில் எல்லாரும் துணை நின்றார்கள். அதே போல் பல விதங்களில் திருமாவளவனும் எங்களோடு துணை நின்றார். உள்துறை அமைச்சரை சந்திக்க வைத்தார். ஏற்கனவே வந்தோம். அவர் வெளிநாடு சென்றிருந்ததால் இப்போது தான் சந்தித்து நன்றி தெரிவிக்க முடிந்தது. கிடார் பரிசளித்தார்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

“எனக்கு மிகவும் பிடித்த கிடாரை பரித்தளவர் அண்ணன் திருமாவளவன். உணர்வுப்பூர்வமாக எங்கள் நியாயம் அறிந்து எங்களோடு நின்றவர் அண்ணன். நன்றி தெரிவிக்கிறோம்” இவ்வாறு பேரறிவாளன் கூறினார். 

விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் பேசுகையில், “அற்புதம்மாளின் போராட்டத்தின் நியாயங்களை ஜனநாயக சக்திகள் உள்வாங்கிக் கொண்டு அவரோடு நின்றனர். மக்கள் போராட்டம், சட்டப் போராட்டம் இரண்டும் நடந்தது. இவருக்கும் குற்றத்திற்கும் தொடர்பில்லை என்பதே புலனாய்வு செய்தவர்கள் கண்டறியப்பட்டதே இவ்வழக்கின் திருப்புமுனையாகியது.

அரசியலமைப்பு சட்டம் 161 ஆளுநருக்கான அதிகாரத்தை தெளிபட வரையறுத்தும் அது நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தது. மாநில அரசின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்பதைத்தான் அறிவின் விடுதலை தெளிவுபடுத்தியது. இதில் விமர்சிக்க எதுவுமில்லை. 100% சட்டப்பூர்வமாக அறிவு விடுதலையடைந்திருக்கிறார். ஜெ, இன்றைய முதல்வர் உட்பட அவரவர் அதிகாரத்திற்கு உட்பட்டு இந்த விடுதலைகாக உதவியிருக்கின்றனர். செங்கொடி தன்னை தீயில் மாய்த்துக் கொண்டு மரண தண்டனை கூடாது என்று வெகுமக்கள் போராட்டத்திற்கு வழிவகுத்தார்.

தலைசிறந்த வழக்கறிஞர்களை நியமனம் செய்து வழக்கை திறம்பட நடத்தியது தற்போதைய தமிழக அரசு. நீதி வென்றது, அறம் வென்றது.பேரறிவாளன் நிரபராதி. அறிவு எதற்காக பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்பது அவருக்கே தெரியாது. ஜனநாயக சக்திகளின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறோம்.

ராஜிவ் கொலைக் குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டியது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் பொறுப்பு. நீதிபதி சதாசிவத்தின் தீர்ப்பை முழுமையாக அனைவரும் படிக்க வேண்டும். அப்படி படித்தால் அறிவின் விடுதலையை யாரும் கேள்வி கேட்கமாட்டார்கள். பேரறிவாளன் விடுதலையால் திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் வராது. காங்கிரஸ்காரர்கள் கட்சி கடமைக்காக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com