அரியலூர் மாவட்டத்தில் கிராம மக்களின் முயற்சியால் வறட்சியான பகுதி சோலைவனமாகக் காட்சியளிக்கிறது.
அரியலூர் - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சாத்தமங்கலம் கிராம மக்களின் முயற்சியாலும், ஊராட்சி நிர்வாகத்தின் நடவடிக்கையாலும் ஒரு வனமே உருவாக்கப்பட்டுள்ளது. கருப்புசாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் 11 ஏக்கர் பரப்பளவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.56 லட்சம் மதிப்பில் மரங்கள் நடப்பட்டுள்ளன.
பொட்டல் காடாகக் கிடந்த நிலம் தூய்மைப்படுத்தப்பட்டு அதில் புளியங்கன்று, புங்கன், வேம்பு, நாவல், தூங்குவாகை, நீர்மருது, தேக்கு, ரோஸ்வுட் உள்ளிட்ட 15 வகையான மரக்கன்றுகள் நட்டு வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச தனியாக போர்வெல் அமைத்து குழாய்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. 100 நாள் வேலை திட்ட பணியாளர்களே இதனை பராமரித்து வருகின்றனர். இதனால், வறட்சியாய் காணப்பட்டு அப்பகுதி தற்போது சோலைவனமாகக் காட்சியளிக்கிறது.