‘முகத்தை கழுவுங்கள்; தேநீர் குடியுங்கள்’ - வாகன ஓட்டிகளுக்கு தேநீர் வழங்கும் போலீசார்!
அரியலூர் வழியாக இரவில் சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு தேநீர் வழங்கி போலீசார் புத்துணர்ச்சி அளித்தனர்.
நாளுக்கு நாள் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் சாலை விபத்தும் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான சாலை விபத்துகள் இரவு நேரங்களில் நடைபெறுகின்றன. இரவில் வாகனம் ஓட்டும் ஓட்டுநர்கள் தூக்க கலக்கத்தில் இருப்பதால் கவனக்குறைவு ஏற்பட்டு விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்கும் விதமாக அரியலூர் போலீசார் விழிப்புணர்வு முயற்சியில் இறங்கியுள்ளனர்.
ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி மோகன்தாஸ் தலைமையிலான போலீசார் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துக்கள் குறித்த
விழிப்புணர்வை ஓட்டுநர்களிடம் எடுத்துக்கூறினர். மேலும் ஓட்டுநர்களின் சோர்வை போக்கும் விதமாக ஓட்டுநர்களுக்கு சிறிது ஓய்வு கொடுத்து அவர்களின் முகத்தை கழுவ செய்து தேநீரும் வழங்கினர். போலீசாரின் இந்த நடவடிக்கை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.