கும்பகோணம், சோழன்மாளிகையில் தொல்லியல்துறை ஆய்வு நடத்த வேண்டும்: பெ.மணியரசன்

கும்பகோணம், சோழன்மாளிகையில் தொல்லியல்துறை ஆய்வு நடத்த வேண்டும்: பெ.மணியரசன்
கும்பகோணம், சோழன்மாளிகையில் தொல்லியல்துறை ஆய்வு நடத்த வேண்டும்: பெ.மணியரசன்

தொல்தமிழர் சின்னங்கள் கிடைத்த தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகிலுள்ள சோழன்மாளிகையில் தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள ‘பழையாறை’ கி.பி. 7, 8 ஆம் நூற்றாண்டுகளில் சோழர்கள் தலைநகராக விளங்கிய ஊராகும். இப்போது அப்பகுதியில் “சோழன்மாளிகை” என்ற ஊரில் தொல் தமிழர்களின் சுடுமண் பானைகள், உறை கிணறு, பெண்களின் ஒப்பனைப் பொருட்கள், கருப்பு சிவப்பு வண்ணப் பூச்சுள்ள பானைகள் எனப் பல வரலாற்றுச் சின்னங்கள் கிடைத்துள்ளன.

அப்பகுதியைச் சேர்ந்த திரு.கலியபெருமாள் மற்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் பிரபு, தீந்தமிழன் ஆகியோர் குடந்தை வட்டாட்சியர், கிராமநிர்வாக அலுவலர் ஆகியோருக்கு உடனடியாகத் இத்தகவலைச் சொல்லி ஆய்வு செய்வதற்குரிய பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். அத்துடன் திருச்சி, தஞ்சையில் உள்ள தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறைக்கும் உரியவாறு தகவல் தெரிவித்துள்ளார்கள்.

ஆனால் இன்று வரை தமிழ்நாடு அரசுத் தரப்பிலிருந்து எந்த அசைவும் இல்லை அந்த நால்வழிச் சாலை போட ஒப்பந்தம் எடுத்துள்ள குசராத்தை சேர்ந்த பட்டேல் நிறுவனம், தொல்பொருட்கள் கிடைத்த குழிகள் மீது மேலும் மேலும் மண் போட்டு நிரப்பி மூடி வருகிறது. இந்நிலையில் திருவாரூர் நடுவண் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக உள்ள பேராசிரியர் ச.இரவி அவர்களுக்கு பிரபு, கலியபெருமாள், தீந்தமிழன் ஆகியோர் தகவல் கொடுத்து அழைத்து வந்து மேற்படி இடங்களைக் காட்டினார்கள்.

பேராசிரியர் ச.இரவி அவர்கள் அந்த இடங்களையும், கிடைத்த தொல் பொருட்களையும் பார்த்துவிட்டு, இவை இடைக்காலச் சோழர்களின் தலைநகரமாகப் பழையாறை விளங்கிய காலத்தில் – அதாவது கி.பி ஏழாம் நூற்றாண்டு வாக்கில் வாழ்ந்தவர்கள் பயன்படுத்திய பொருளாக இருக்க வேண்டும்.  அதே வேளை, கருப்பு – சிவப்பு வண்ணம் பூசப்பட்ட சுட்ட மண்பானை கிடைத்திருப்பதால், இடைக்காலச் சோழர்  காலத்திற்கு  முந்திய காலத் தொல் தமிழர் நாகரிகச் சின்னங்களாகவும் இவை இருக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக இதில் கவனஞ்செலுத்தி தமிழ் மொழி, தமிழ் இனம் ஆகியவற்றின் வரலாற்றுச் சின்னங்கள் மீது உண்மையான அக்கறையுள்ள – நேர்மையான – ஆய்வாளர் குழுவை அனுப்பி ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழர்களின் சங்க கால இலக்கியங்களும் திருக்குறள் – சிலப்பதிகாரம் போன்றவையும் சமற்கிருத நூல்களிலிருந்து காப்பி அடித்து எழுதப்பட்டவை என்று நூல்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கும் மேனாள் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறைத் தலைவர் இரா.நாகசாமி போன்றவர்களையோ, அவர்களின் பரிந்துரை பெற்றோரையோ அனுப்பாமல் எச்சரிக்கையாக இருக்கும்படியும் முதல்வர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com