பேராசிரியர் க.பஞ்சாங்கம், எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித்-க்கு மா.அரங்கநாதன் இலக்கிய விருது!

இந்த ஆண்டுக்கான மா.அரங்கநாதன் இலக்கிய விருது பேராசிரியர் க.பஞ்சாங்கம், எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித் ஆகியோர் வழங்கப்பட்டது.
எழுத்தாளர் சுரேஷ்குமார், பேராசிரியர் பஞ்சாங்கம், Aranganathan Award
எழுத்தாளர் சுரேஷ்குமார், பேராசிரியர் பஞ்சாங்கம், Aranganathan Awardpt desk

சென்னை ஐகோர்ட்டின் மூத்த நீதிபதி மகாதேவனின் தந்தை மா.அரங்கநாதன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 16-ம் தேதி தமிழ் அறிஞர்களுக்கு மா.அரங்கநாதன் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விருதுக்கு பேராசிரியர் க.பஞ்சாங்கம், எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணாசாலையில் உள்ள ராணி சீதை அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விருதுகளை வழங்கினார்.

பின்னர், மா.அரங்கநாதனின் சிறுகதைகளை ஒரே தொகுப்பாக மூன்றில் என்ற பெயரில் புத்தகமும் வெளியிடப்பட்டது. தொடர்ந்து விழாவில் மூத்த நீதிபதி ஆர்.மகாதேவன் பேசும்போது...

ராமலிங்க அடிகளார் பாடிய இன்று வருமோ.. என்ற பாடலின் அடிப்படையில் என் தந்தையார் சித்தர் போல் இலக்கிய சமூக பணிகளுக்காக உழைத்து மறைந்தார் என்றார்.

அதைத் தொடர்ந்து நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பேசும்போது, சிவபெருமானை பித்தன் என்றும் அழைக்கிறோம். அவரை சுந்தரர், பித்தன் என்றே பாடியுள்ளார். பொதுவாக பித்தன் என்றால் பித்து பிடித்தவன், புத்தி சுவாதீனம் இல்லாதவன் என்று தான் நாம் சொல்வோம். ஆனால், கிருபானந்த வாரியார் 'பித்து' என்றால் குற்றம் செய்த மகனை மன்னிப்பது என்கிறார்.

எனவே சிவபெருமான் தவறு செய்யும் தன் பக்தர்களை மன்னித்து அருளுவதால் அவரை பித்தன் என்று அழைக்கிறோம். நீதிபதி மகாதேவன் பல ஆண்டுகளாக எனக்கு தெரியும். யாரிடமும் கோபம் கொண்டு பேச மாட்டார். கோபம் வந்தாலும் அதனை புன்புருவல் மூலம் கரைத்து விடுவார். இவரது தந்தை மா.அரங்கநாதன் 1950 ஆம் ஆண்டுகளிலேயே சிறுகதைகளை எழுதத் தொடங்கி விட்டார். அப்படி இவர் எழுதிய ஒரு சிறுகதையில்...

தேவாலயத்தில் முத்துக்கருப்பன் என்பவர் ஏசுநாதரை வணங்குகிறார். அவரிடம் பாதிரியார் விசாரித்த போது சுசீந்திரத்தில் உள்ள தாணுமலையானை வணங்கும் போது ஏசுநாதர் தெரிந்தார். அதனால் இங்கு வந்தேன் என்றார். உடனே பாதிரியார் இனிமேல் நீ ஏசுநாதரை மட்டுமே வணங்க வேண்டும் என்று கூறுகிறார்.

அதற்கு முத்துக்கருப்பன், இந்த தேவாலயத்தில் ஏசுநாதரை கும்பிடும்போது எனக்கு சுசீந்திரத்தில் உள்ள தாணுமலையான் தெரிகிறார் என்று சொல்லி சிறுகதையை முடிக்கிறார். இது தமிழர்களின் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற தத்துவத்தையும், யாதும் ஊரே... யாவரும் கேளீர்... என்ற தத்துவத்தையும் எடுத்துக்காட்டும் வகையில் உள்ளது. இதுபோல பல சிறுகதைகளை மா.அரங்கநாதன் எழுதியுள்ளார் என பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு தலைமை செயலாளர் வெ.இறையன்பு, சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், டி.கிருஷ்ணகுமார், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, எம்.தண்டபாணி, பி.டி.ஆதிகேசவலு, சி.சரவணன், டி.பரதசக்ரவத்தி, ஜெ.சத்திய நாராயண பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com