“இந்த டாபிக் எனக்குள் தீயை உண்டாக்குகிறது” - தஸ்லீமாவுக்கு பதிலளித்த ரஹ்மான் மகள்

“இந்த டாபிக் எனக்குள் தீயை உண்டாக்குகிறது” - தஸ்லீமாவுக்கு பதிலளித்த ரஹ்மான் மகள்
“இந்த டாபிக் எனக்குள் தீயை உண்டாக்குகிறது” - தஸ்லீமாவுக்கு பதிலளித்த ரஹ்மான் மகள்

எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் எழுப்பிய பர்தா சர்ச்சைக்கு ரஹ்மானின் மகள் கதீஜா, மிக நீண்ட விளக்கத்தை அவரது இன்ஸ்டா பக்கத்தில் அளித்துள்ளார்.


இசை உலகில் மிகவும் புகழ்வாய்ந்த பிரபலமாக வலம் வருபவர் ஏ. ஆர். ரஹ்மான். அதிரடியான விஷயங்களில்கூட அவர் அமைதியாகவே பதில் கொடுப்பார். அதிகம் சர்ச்சைகளில் சிக்காத ரஹ்மான், கடந்த ஆண்டு மும்பையில் ‘ஸ்லம்டாக் மில்லினர்’படத்தின் பத்தாம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரஹ்மானின் மகள் கதிஜாவும் பங்கேற்றார். அவரது தந்தையோடு அவர் மேடையில் ஒரு உரையாடலையும் நடத்தினார். அப்போது கதிஜா அணிந்து வந்த பர்தா பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.

‘ரஹ்மான் பிற்போக்குத்தனமாக நடந்து கொண்டுள்ளார்’என பலர் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்திருந்தனர். உடனே அதனையடுத்து அது பெரும் விவாதமாக மாறியது. இதற்கு ரஹ்மானின் மகள், ‘நான் எந்த உடையை அணிய வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பம்’ எனக் கூறி விளக்கம் அளித்திருந்தார். மேலும், ‘எனது தேர்வுக்கும் விருப்பத்திற்கும் எனது பெற்றோர்கள் பொறுப்பாக முடியாது’ என்று கூறியிருந்தார். அதன்பின் அந்தச் சர்ச்சை அடங்கியது.

இந்த நிகழ்வு முடிந்து இத்தனை மாதங்கள் கடந்த பின்பு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக பெண்ணியவாதியும் சர்ச்சைக்குரிய எழுத்தாளருமான தஸ்லீமா நஸ்ரின், “நான் ஆர் ரஹ்மானின் இசையை முற்றிலும் விரும்புகிறேன். ஆனால் நான் அவரது அன்பான மகளை பார்க்கும்போது எல்லாம் எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. ஒரு கலாச்சார குடும்பத்தில் படித்த பெண்களைக்கூட மிக எளிதாக மூளைச்சலவை செய்ய முடியும் என்பதை அறிந்துக் கொள்வது மிகவும் வருத்தமளிக்கிறது” என்று கூறியுள்ளார். இந்தப் பதிவை அவர் ட்விட்டரில் கூறியுள்ளார். அதற்குப் பலரும் தங்களின் கருத்துகளை பின்னூட்டமாக எழுதி வருகின்றனர்.

இந்தச் சர்ச்சையின் மிக முக்கியமான திருப்பமாக ஏ. ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா, அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவைப் போட்டுள்ளார். அதில் அவர், “ஒரு வருடத்திற்குப் பின்பாக மீண்டும் இந்த டாபிக் சுற்ற ஆரம்பித்துள்ளது. இந்த நாட்டில் எவ்வளவு நடக்கிறது. ஆனால் அனைத்து மக்களும் ஒரு பெண் அணிய விரும்பும் துண்டு உடை குறித்து கவனம் செலுத்துகிறார்கள். ஆஹா, நான் மிகவும் திடுக்கிட்டுவிட்டேன்.

ஒவ்வொரு முறையும் இந்த டாபிக் எனக்குள் தீயை உண்டாக்குகிறது. நிறைய விஷயங்களைச் சொல்ல விரும்புகிறது. பல ஆண்டுகளாகப் பல்வேறு குணாதிசயங்களைக் கடந்த ஒரு வருடமாக நான் கண்டுவிட்டேன். என்னுடைய வாழ்க்கையில் நான் எடுத்த முடிவுகளை எண்ணி பலவீனமடையவோ வருத்தப்படவோ மாட்டேன். நான் என்ன செய்கிறேன் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், பெருமிதம் கொள்கிறேன், என்னைப் போலவே என்னை ஏற்றுக்கொண்டவர்களுக்கு நன்றி. நான் மேலும் சொல்ல விரும்பவில்லை” என்று மிக நீண்ட விளக்கத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும் அவரது பதிவில், “அன்புள்ள தஸ்லிமா நஸ்ரின், என்னுடைய ஆடையால் உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். எனது உடையால் எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதில்லை. அதற்குப் பதிலாக நான் ஏற்றுக் கொண்ட விஷயத்தில் பெருமையாகவும் உறுதியாகவும் உணர்கிறேன்”எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com