'ஏற்கெனவே உரிய வழிகாட்டல் பிறப்பிக்கபட்டுவிட்டது' - ஜல்லிக்கட்டு வழக்கை முடித்த நீதிமன்றம்
ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடக்கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிமன்றம் முடித்து வைத்தது. ஏற்கெனவே இது தொடர்பாக உரிய வழிகாட்டல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரையில் நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் உலகப்புகழ் பெற்றவை. இதற்கான ஆயத்த வேலைகளை மாவட்ட நிர்வாகமும், கால்நடை பராமரிப்பு துறை மற்றும் காவல் துறையினரும் இணைந்து செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மதுரை மாவட்டம் தவிர பிற மாவட்டங்களில் இருந்தும் காளைகள் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள ஒப்புகை சீட்டு வழங்கப்படும். ஒரு ஜல்லிக்கட்டில் அதிகபட்சமாக சுமார் 750 காளைகள் மட்டுமே பங்கேற்க முடியும். ஆனால், சுமார் 1500 காளைகளுக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படுகிறது.
காளைகளை வரிசை எண் அடிப்படையில் வரிசைப்படுத்தி, தள்ளுமுள்ளு ஏற்படாத வண்ணம் நிறுத்துவதற்கு இதுவரை உரிய வழிவகைகளை செய்யப்படுவது இல்லை. இதனால் ஒப்புகை சீட்டு பெற்ற காளைகள் பல ஜல்லிக்கட்டில் பங்கேற்க இயலாத நிலை உள்ளது. அதோடு சில நேரங்களில் காளை உரிமையாளர்களும், உடன்வரும் வருவோரும் காளைகளால் காயப்படுத்தப்படும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு காளைகளை முறைப்படுத்தி, வரிசையாக ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுப்புவது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
ஆகவே மதுரை மாவட்டத்தில் ஜனவரி 14ஆம் தேதி முதல் நடைபெறும் அனைத்து ஜல்லிக்கட்டு விளையாட்டுகளிலும் காளைகளுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்படாத வண்ணம் 50 காளைகளாக பிரித்து, இரும்புக் கம்பிகள் அமைத்து, வரிசை எண் வழங்கி முறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு, "ஏற்கனவே இது தொடர்பாக நீதிமன்றம் உரிய வழிகாட்டல்களை பிறப்பித்துள்ளது. ஆகவே புதிதாக உத்தரவை பிறப்பிக்க தேவையில்லை" எனக் கூறி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.