சிறுமிகள் வன்கொடுமை - நீதிமன்றம் தாமாக விசாரிக்க முறையீடு
கடந்த 8 ஆண்டுகளாக தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிகள், சிறார்கள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் அருள் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக முறையீடு ஒன்றை முன்வைத்தார்.
அப்போது, “தமிழகத்தில் தொடர்ச்சியாக சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. 2012ஆம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்ட நிலையில் அது முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அது முறையாக நடைமுறைப்படுத்தப்படாததே தொடர்ச்சியாக சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கக் காரணம் எனவும் கருதப்படுகிறது.
ஆகவே, கடந்த 8 ஆண்டுகளாக தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமிகள், சிறார்கள் தொடர்பான அனைத்து வழக்குகளையும் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்" என முறையிட்டார்.
இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.