டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி நீதிமன்றத்தில் முறையீடு
கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூட உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் தரப்பில் அவரது வழக்கறிஞர், நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பாக இந்த முறையீட்டை முன்வைத்தார். தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் நிலை மிக தீவிரமாக பரவி வரும் நிலையில், வழிபாட்டு கூட்டங்கள் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், டாஸ்மாக் கடைகளுக்கு எவ்விதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. மதுக்கடைகளில் நிரம்பி வழியும் கூட்டத்தால் கொரோனா பரவல் அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
ஆகவே தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூட உத்தரவிட வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்" என முறையிட்டார். அதற்கு நீதிபதிகள் மனுவாக தாக்கல் செய்யவும், நாளை விசாரணைக்கு ஏற்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

