“முதல்வருக்குத்தான் அதிகாரம் உள்ளது”- சபாநாயகர் அப்பாவு

அமைச்சரவையில் யார் யாருக்கு என்ன துறை ஒதுக்க வேண்டும் என முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக முதல்வருக்குத்தான் உள்ளது எனக் கூறியுள்ளார் சபாநாயகர் அப்பாவு.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதி பாசன விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க இன்று முதல் 31.10.2023 வரை 150 கன அடி தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

அதன்படி நெல்லை மாவட்டம் ராதாபுரம் பாசனத்திற்கு அழகப்பபுரம் அருகே நிலப்பாறை திருமூலநகர் கால்வாயிலிருந்து 150 கன அடி தண்ணீரை தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இன்று திறந்து வைத்தனர். இதன் மூலமாக நெல்லை மாவட்டத்தில் சுமார் 15,597 ஏக்கர் நிலங்கள் நேரடியாக பயன்பெறும். 52 குளங்கள் மூலமாக மறைமுகமாக 1,013 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு

இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, ''இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது அமைச்சரவையில் யார் யாருக்கு என்ன துறை ஒதுக்க வேண்டும் என முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக முதல்வருக்குத்தான் உள்ளது. ஆளுநர் திருப்பி அனுப்பியது வேதனையாக உள்ளது. அதை தவிர்த்திருக்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லை. வழக்கு நிலுவையில் இருக்கிறது.

வழக்கு நிலுவையில் இருந்தால் அமைச்சர் பதவியில் இருக்கக்கூடாது என்று எந்த சட்டத்திலும் இல்லை. தண்டனை பெற்றால் மட்டும்தான் பதவியில் இருக்ககூடாது. தொடர்ந்து ஆளுநர் இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார். விழிப்படையாவிட்டால் மதச்சார்பற்ற நாடு மதசார்புள்ள நாடாக மாறிவிடும்'' என பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com