“தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் முயற்சியை தடுத்தார் அமித் ஷா “ - அன்வர் ராஜா பிரத்யேக பேட்டி!
“இது என் கட்சி. நான் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைப்பேன்” என்று பழனிசாமி கூறிவரும் நிலையில், இந்த கூட்டணியை அமைத்தது அவரல்ல; பாஜகதான் என்று புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருக்கிறார் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மூத்த அரசியல் தலைவரான அன்வர் ராஜா. “திமுக எங்கள் அரசியல் எதிரி... பாஜக கொள்கை எதிரி” என்று தொடர்ந்து கூறிவரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய், அதிமுக-வுக்கு மறைமுகமாக கூட்டணி அழைப்பு விடுத்துவந்தார்.
அதிமுக - தவெக கூட்டணி அமைந்தால், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றமேகூட ஏற்படலாம் என்றும் பேசப்பட்டது. இந்தச் சூழலில் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தந்த மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக - அதிமுக கூட்டணியை உறுதி செய்தார். இந்த திடீர் கூட்டணி உடன்பாட்டால், அதிமுக - தவெக கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு தவறிப்போனது. இது எதேச்சையாக நடந்தது அல்ல... அமித் ஷாவின் காய் நகர்த்தலிலேயே, அதிமுக - தவெக கூட்டணி முயற்சி முறியடிக்கப்பட்டது என்று சொல்கிறார் அன்வர் ராஜா.
சமீபத்தில் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ள அவர், புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “கொஞ்சம் தாமதித்தாலும் தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துவிடும் என்பதால்தான் அமித் ஷா அவசரமாக தமிழ்நாட்டுக்கு வந்தார்” என்று கூறியுள்ளார்.