“எல்லோரோடும் ஒத்துப்போகாத ஒருவன் இறந்தவனுக்கு சமம்” - அதிமுகவில் மீண்டும் இணைந்தபின் அன்வர் ராஜா!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் மீண்டும் இணைந்தார் அன்வர் ராஜா.
அதிமுகவில் இணைந்த அன்வர் ராஜா
அதிமுகவில் இணைந்த அன்வர் ராஜாTwitter

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, அவர் முன்னிலையில் முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா இன்று மீண்டும் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்து சேரலாம் என்ற அறிவிப்பை அடுத்து மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார் அன்வர் ராஜா.

அதன் பின்னர் அன்வர் ராஜா செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், “எல்லோரோடும் ஒத்துப்போகாத ஒருவன் இறந்தவனுக்கு சமமாவான். அதிமுக ஒரு மிகப்பெரிய இயக்கம். அந்த இயக்கத்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் தோற்றுவித்ததில் என் பங்கும் உண்டு. எம்ஜிஆர் கட்சி தொடங்கும்போது நான் அதில் இருந்தேன். பின் ஒன்றிய கழகச் செயலாளர், மாவட்ட செயலாளர், அமைப்புச் செயலாளர், சிறுபான்மை அணி செயலாளர் என பல பதவிகளில் இருந்துள்ளேன்.

அன்வர் ராஜா
அன்வர் ராஜா

இப்படி எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கபட்டவன் நான். அப்படி இருந்த சூழ்நிலையில் என் வாழ்வில் ஒரு சிறிய சறுக்கல். இப்போது மீண்டும் அதிமுகவில் கட்சியின் பொதுச் செயலாளர் தலைமையில் இணைந்துள்ளேன். கட்சியின் சட்டதிட்டம் என்னவென்று எனக்கு தெரியும். கட்சியின் வளர்ச்சிக்கு நான் பாடுபடுவேன்”

பாஜக மீதான விமர்சனம்:

“ஒரு கட்சியை விமர்சிப்பது என்பது வேறு கூட்டணி என்பது வேறு. இன்றும் கூட பாஜகவின் தலைவர்கள் அதிமுகவை விமர்சிக்க தான் செய்கிறார்கள். ஆனால் கூட்டணி என்பதை முடிவு செய்ய வேண்டியது இரு கட்சியின் தலைவர்கள். இதுவரை காங்கிரஸ்ஸை தவிர எல்லா கட்சிகளும் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள். திமுக - பாஜக கூட்டணிகூட பிண்ணிப்பிணைந்து இருந்துள்ளது. ஆனால் நாங்கள் அப்படியல்ல. கொள்கைக்கு ஏதேனும் இடர்பாடு ஏற்படுமானால் உடனடியாக அந்த கூட்டணியில் இருந்து விலகுவதற்கு அதிமுக தயங்கியதில்லை. பத்து நாட்கள் டெல்லியில் தங்கியிருந்து, பாஜக ஆட்சியை கவிழ்த்தவர் ஜெயலலிதா.

“வருத்தம் இல்லை”

“கட்சியில் இந்த ஒன்றரை ஆண்டாக நான் இல்லை. இருப்பினும் இல்லாமல்போன காலம் எனக்கு வருத்தம் அளிக்கவில்லை. ஏனெனில் நான் கட்சிக்காரனாகத்தான் இருந்தேன். அதாவது கட்சிக்காரர்கள் எல்லோரும் என்னுடன் பேசிக் கொண்டுதான் இருந்தார்கள். அவர்களின் எல்லா விசேஷங்களுக்கும் சென்று கொண்டுதான் இருந்தேன். நான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி கட்சியின் தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com