சிறுபான்மையினருக்கு எதிரானவரா? எதிர்ப்பும் ஆதரவும் ஏன்? என்னாகும் விக்டோரியா கௌரி நியமனம்?

சிறுபான்மையினருக்கு எதிரானவரா? எதிர்ப்பும் ஆதரவும் ஏன்? என்னாகும் விக்டோரியா கௌரி நியமனம்?
சிறுபான்மையினருக்கு எதிரானவரா? எதிர்ப்பும் ஆதரவும் ஏன்? என்னாகும் விக்டோரியா கௌரி நியமனம்?

விக்டோரியா கௌரியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யக்கூடாது என சென்னை வழக்கறிஞர்கள் குழு உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கும் நிலையில், அவரது நியமனத்திற்கு ஆதரவாக உயர்நீதிமன்ற மதுரைகிளையிலிருந்து ஒரு வழக்கறிஞர்கள் குழு உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதிகளாக நியமிப்பதற்காக 8 பேரின் பெயர்களை உச்சநீதிமன்ற கொலிஜியம், மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருந்தது. அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசின் வழக்கறிஞராக உள்ள விக்டோரியா கௌரியை, உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், ஆர்.வைகை, நாக சைலா, வி.சுரேஷ், சுதா ராமலிங்கம், அய்யாதுரை, ஜிம்ராஜ் மில்டன் உட்பட 21 பேர் கையெழுத்திட்டு குடியரசு தலைவருக்கும், உச்சநீதிமன்ற கொலீஜியத்திற்கும் கடிதம் அனுப்பியுள்ளனர்.

எதற்காக அவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக வரக்கூடாது?-சென்னை வழக்கறிஞர்களின் காரணம்!

நாட்டின் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக விக்டோரியா கௌரி பல்வேறு வெறுப்பு கருத்துகளை வெளியிட்டுள்ளார். அவர் பாஜக கட்சியில் இருக்கிறார். பாஜகவின் முன்னாள் பொதுச்செயலாளராகவும் இருந்துள்ளார். தொடர்ந்து அவருடைய கருத்துக்கள் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புடையதாக மட்டும் தான் இருந்து இருக்கிறது. ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியை அரசியல் பின்புலத்தின் காரணமாக ஒருபோதும் நியமனம் செய்யக்கூடாது.

சிறப்புப் பிரிவு காவல்துறை, புலனாய்வுப் பணியகம் போன்ற மாநில மற்றும் மத்திய அரசின் பரிந்துரையின் பெயரில் நீதிபதியாக நியமனம் செய்யாமல், அரசியல் பின்புலத்தின் மூலம் நியமனம் செய்வது சரியானதாக இருக்காது. தமிழகத்தில் சில அரசியல் கட்சிகள் அரசியல் பின்புலத்தை பயன்படுத்தி நீதிபதிகளை நியமிக்க முயல்கிறது. எனவே, மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரலாக இருக்கும் விக்டோரியா கௌரியை, நீதிபதியாக நியமனம் செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரையை திரும்ப பெற வேண்டும் என கடிதம் அனுப்பியுள்ளனர்.

இஸ்லாம் பச்சை தீவிரவாதம், கிறிஸ்துவம் வெள்ளை தீவிரவாதம் என்று கூறியதை சுட்டிக்காட்டிய வழக்கறிஞர்கள்!

வழக்கறிஞர்களின் எதிர்ப்பு கடிதத்தில் தற்போது வரை விக்டோரிய கௌரி என்ன மாதிரியான வெறுப்பு கருத்துகளை கூறியுள்ளார் என்பதும், அதற்கான யூடியூப் வீடியோ லிங்கையும் சேர்த்து இணைத்து அனுப்பியுள்ளனர்.

கவுரியின் பேச்சுகளின் பின்னணியில் பார்க்கையில் ஒருவெளை அவர் நீதிபதியாகிவிட்டால், முஸ்லீம் அல்லது கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த எந்தவொரு வழக்கறிஞருக்கும், அவரது நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்று நம்ப முடியுமா?’ என வழக்கறிஞர்கள் தங்கள் கடிதத்தில் இணைத்துள்ளனர். மேலும் முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ மக்களுக்கு எதிராக இவர் பேசிய வீடியோக்களின் லிங்க்-ஐயும் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்பாக விக்டோரிய கவுரி, தனது ஒரு பேட்டியில், “பார்த்தீர்களேயானால், இஸ்லாம் பச்சை தீவிரவாதம், கிறிஸ்துவம் வெள்ளை தீவிரவாதம்” எனப்பேசியதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் லவ் ஜிகாத் குறித்த சர்ச்சை ஏற்படுத்தும் வகையிலான கருத்தையும் அவர் பேசியுள்ளார். இவை அனைத்தையும் அவர் ஆர்.எஸ்.எஸ். யூ-ட்யூப் தளத்துக்காக அளித்திருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு எதிராக பேசிய விக்டோரியா கவுரியை நீதிபதியாக நியமிப்பது என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும், அவரை நியமிக்க அனுப்பிய பரிந்துரையை திருப்பி அனுப்ப வேண்டும், அவர் எவ்வாறு உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டார் என விளக்கம் கேட்க வேண்டும் என்றும் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தான் விக்டோரியா கௌரிக்கு ஆதரவாகவும், சென்னை வழக்கறிஞர்கள் கடிதத்திற்கு எதிராகவும், ஒரு கடிதத்தை உச்சநீதிமன்ற கொலீஜியத்திற்கு அனுப்பியுள்ளனர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் மூத்த வழக்கறிஞர்கள் அடங்கிய குழு.

விக்டோரியா சட்டம் வளர்வதற்கு பெரிதாக உழைத்து வருகிறார்!- ஆதரவு குரல் நீட்டிய மதுரை வழக்கறிஞர்கள்

விக்டோரியா கௌரி அரசியல் பின்புலத்தின் மூலம் நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அவர் சட்டம் வளர்வதற்காக, ஒரு துணை சொலிசிட்டர் ஜெனரலாக கடினமாக உழைத்து வருகிறார். மேலும் இதற்கு முன்பு விக்டோரியா கௌரி போன்று தேர்வு செய்யப்பட்ட பல நீதிபதிகள், சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். எனவே அவரது நீதிபதி நியமனத்தை திரும்ப பெறக்கூடாது என்ற கோரிக்கையை வைத்திருக்கின்றனர்.

எதிர்ப்பு மற்றும் ஆதரவு கடிதத்தால் உயர்நீதிமன்ற நீதிபதிக்கான நியமனத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? இல்லை அவர் நீதிபதியாக நியமனம் செய்யப்படுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com