மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு: ஏப்.3ம் தேதி மாநிலம் தழுவிய கடையடைப்பு
தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில், மீத்தேன் திட்டத்தை ஒருபோதும் செயல்படுத்தக் கூடாது என்றும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும், விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற மூன்றாம் தேதி முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டாங்களில் நிலக்கரி படிம மீத்தேன் எரிவாயு எடுப்பதற்காக மத்திய அரசு குஜராத் நிறுவனமான கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் நிறுவனத்திற்கு அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் எதிர்ப்பால் திட்டத்திற்கு தமிழக அரசு தடைவிதித்தது. மத்திய அரசும் இத்திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது. இந்த நிலையில், தற்போது மீண்டும், தமிழகத்தில் மீத்தேன் வாயு எடுக்க மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கத்தினர், முதல்கட்டமாக வருகிற 3ஆம் தேதி மாநிலம் தழுவிய கடையடைப்பு நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.