முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் தொடர் சோதனை - 'V' வரிசையில் சிக்கும் விஜயபாஸ்கர்

முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் தொடர் சோதனை - 'V' வரிசையில் சிக்கும் விஜயபாஸ்கர்
முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் தொடர் சோதனை - 'V' வரிசையில் சிக்கும் விஜயபாஸ்கர்

முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை கணக்கில் வராத பல ஆவணங்களும், ரொக்கங்களும், சொத்துக்களும் கணக்கெடுக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் சோதனை நடைபெற்று வருகிறது. இதற்குமுன்பே அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி. வீரமணி, எஸ்.பி வேலுமணி உள்ளிட்டோர் மீது சொத்துக் குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்கள் பெயரில் அமைச்சர் பணி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக செப்டம்பர் 15 ஆம் தேதி வேலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர். அதை தொடர்ந்து, செப்டம்பர் 16 ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜோலார்பேட்டையில் உள்ள வீரமணி வீடு, அவரது உறவினர்கள், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடத்தினர்.

அந்தச் சோதனையில் 623 (சுமார் 5 கிலோ) சவரன் தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 34 லட்சம் ரொக்கப்பணம், 7 கிலோ வெள்ளி, 1 லட்சத்தி 80 ஆயிரம் அந்நிய செலாவணி டாலர், செல்போன், லேப்டான், ஹாட்டிஸ்க் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதேபோல், முன்னாள் அமைச்சர் எஸ்பி.வேலுமணிக்கு தொடர்புள்ள 60 இடங்களில் ஆக்ஸ்ட் 10ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். சென்னை மாநகராட்சி மற்றும் கோயம்புத்தூர் முனிசிபல் கார்ப்பரேஷன் ஆகியவற்றில் 811 கோடி ரூபாய் டெண்டர் விவகாரத்தில் ஊழல் செய்திருப்பதாக இந்த சோதனை நடைபெற்றது.

இதையடுத்து சோதனையின் முடிவில் கணக்கில் காட்டப்படாத 13 லட்சம் ரொக்கம், நிறுவனங்களின் பணபரிவர்த்தனைகள், 2 கோடி வைப்புத்தொகை ஆவணங்கள், மாநகராட்சி சம்பந்தப்பட்ட ஆவணங்கள், ஹார்டிஸ்க், வங்கி லாக்கர் சாவி உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனிடையே எஸ்பி வேலுமணி உட்பட 17 பேர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 120(பி) - கூட்டு சதி, 420 - மோசடி, 409 - நம்பிக்கை மோசடி, 109 - அரசு ஊழியர் லஞ்சம் பெற்றுக் கொண்டு சாதகமாக செயல்படுதல் மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 2 பிரிவுகள் என மொத்தம் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சொத்துக் குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

அதற்கும் முன்னதாக, முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது பெயரிலும், அவருடைய மனைவி விஜயலட்சுமி பெயரிலும், தம்பி சேகர் பெயரிலும் தான் பங்குதாரராக உள்ள நிறுவனங்களின் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகக்கூறி லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவர்மீது வழக்குப்பதிவு செய்து, அவருக்கு சொந்தமான சென்னை மற்றும் கரூர் உட்பட 26 இடங்களில் சுமார் 13 மணிநேரத்திற்கும் மேலாக ஜூலை 22ஆம் தேதி சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில் ரூ.25,56,000 ரொக்கம், காப்பீடு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் பண பரிவர்த்தனை தொடர்பான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை தெரிவித்தது. அதற்கடுத்த சோதனைகளில் வருமானத்திற்கு அதிகமாக 55% சொத்து சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

2016 தேர்தல் வேட்பு மனுவில் ரூ.2.51 கோடி சொத்து இருந்ததாக தெரிவித்த நிலையில் கடந்த தேர்தலில் சொத்து மதிப்பு ரூ.8.62 கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அவர் அமைச்சராக இருந்தபோதுள்ள வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்ததில் இது தெரியவந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்தனர். இதனடிப்படையில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி சகோதரர் சேகர் ஆகியோர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்தது.

தற்போது கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து புதுக்கோட்டையில் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 29 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் விஜயபாஸ்கர் தொடர்புடைய சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 43 இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com