தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவருக்கு சொந்தமான 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வீடு மற்றும் அவருடன் தொடர்புடைய 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு நகைக் கடன் கொடுத்ததில் பல முறைகேடுகள் நடைபெற்றதாக அதிகாரிகள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் இன்று கூட்டுறவு சங்க மாநிலத் தலைவர் இளங்கோவனுக்குச் சொந்தமான சேலம் வீடு மற்றும் அவருடன் தொடர்புடைய சென்னை, சேலம், திருச்சி உள்ளிட்ட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இவர் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக ஜெயலலிதா பேரவை செயலாளராக உள்ளார்.
இளங்கோவன் 2014 முதல் 2020 வரை ரூ.3.78 கோடி அளவிற்கு சொத்துகள் சேர்த்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து சேலத்தில் இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன்குமார் மீது லஞ்ச தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.